ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கவர்னர் முடிவு எடுக்க தாமதம் ஏன்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கவர்னர் முடிவு எடுக்க தாமதம் ஏன்?

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் இன்னும் முடிவு எடுக்காமல் தாமதம் செய்வது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும் மத்திய அரசு இவர்களை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டியது. இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த பிரச்னையில் ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேரை முன் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி தமிழக கவர்னர், 7 பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என்று தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு நேற்று முன்தினம் (ஞாயிறு) மாலையே அமைச்சரவையில் எடுத்த தீர்மானத்தின் நகலை அனுப்பி வைத்தது.

இந்த கடிதத்தை பெற்றுக்கொண்டு தமிழக கவர்னர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடுவார் என்று பரவலாக கருத்து நிலவியது. ஆனால் கடந்த 2 நாட்களாக தமிழக கவர்னர் அரசின் தீர்மானத்தின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் உள்ளார்.

இதுகுறித்து சட்ட நிபுணர்களிடம் விசாரித்தபோது, “இந்த பிரச்னையில் தமிழக கவர்னர் உடனடியாக முடிவு எடுக்க மாட்டார்.

இவர்களது விடுதலையில் ஏதாவது சட்டச்சிக்கல் உள்ளதா? என்று சட்ட நிபுணர்களுடன் கவர்னர் தொடர்ந்து ஆலோசனை நடத்துவார். மேலும், தமிழக கவர்னர் டெல்லி உள்துறை அமைச்சகத்திடம் இது பற்றி கலந்து பேசுவார்.

காரணம், இந்த 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முன் வந்தாலும், மத்திய அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. அதேபோன்று தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரும் இவர்களது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதுபோன்ற பிரச்னைகள் உள்ளதால், அனைவரிடமும் கலந்து ஆலோசித்த பிறகு தமிழக கவர்னர் பன்வாரிலால் ஒரு முடிவை எடுப்பார். அதற்கு சில நாட்கள்கூட ஆகலாம்” என்றார்.

ஆனால், தமிழக கவர்னர் காலம் தாழ்த்தாமல் இந்த பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை தமிழக அமைச்சரவையின் உத்தரவை ஏற்று விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை