சரியான தண்டனை!விதிமுறை மீறி வாகனம் இயக்கிய 11 ஆயிரம் பேரின் லைசென்ஸ் ரத்து!

தினமலர்  தினமலர்
சரியான தண்டனை!விதிமுறை மீறி வாகனம் இயக்கிய 11 ஆயிரம் பேரின் லைசென்ஸ் ரத்து!

கோவை:விதிமீறி வாகனம் ஓட்டிய, 11 ஆயிரத்து, 367 பேரின் லைசென்சை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ரத்து செய்துள்ளனர். இதன் பிறகாவது, சாலை விதிமுறைகளை மீறுவோர், எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார் போலீஸ் கமிஷனர் பெரியய்யா.கோவை மாநகரில், அதிகரித்து வரும் வாகன அடர்த்திக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறைந்தபாடில்லை. இதை தடுக்க, மாநகர போக்குவரத்து போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கு பலனாக, மாநகர பகுதியில் நடப்பாண்டு விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.2017ம் ஆண்டு ஜன., முதல் ஆக.,வரை மாநகர பகுதிகளில் மொத்தம், 887 விபத்துகள் நடந்து, 201 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டு அதே காலக்கட்டத்தில், 761 விபத்துகள் ஏற்பட்டு, 102 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஆக., வரை, 99 உயிரிழப்புகள் குறைந்துள்ளது, புள்ளி விபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா கூறியதாவது:மாநகர பகுதியில் விபத்து ஏற்படும், 22 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் வாகனங்களின் அதிவேகத்தை குறைக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.போக்குவரத்து போலீசார், விதிமீறிய வாகன ஓட்டிகளிடம், 'போட்டோ' ஆதாரத்துடன், அபராதம் வசூலிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. போலீசார் பரிந்துரையின் பேரில், விதிமீறல் வாகன ஓட்டிகள், 11 ஆயிரத்து, 367 பேரின் லைசென்சை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ரத்து செய்துள்ளனர். 'ஹெல்மெட்' மற்றும் 'சீட்' பெல்ட் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் பிறகாவது விதிமீறி வாகனம் இயக்குவோர், எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை