இன்று அமைச்சரவை கூட்டம்: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று அமைச்சரவை கூட்டம்: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வாய்ப்பு

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை தொடர்ந்து, இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அவர்களை விடுதலை செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனாலும் மத்திய அரசு இவர்களை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டியது.

இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் இந்த பிரச்னையில் அதிரடியாக ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினர். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் ஆகியோர் இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, “7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் கொள்கை ஆகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும் உரிய முடிவை தமிழக அரசு எடுக்கும்” என்றனர்.

 இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையொட்டி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தீர்மானம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழக அமைச்சரவை முடிவை ஏற்று, தமிழக கவர்னரும் 7 பேரை விடுதலை செய்வதற்கான உத்தரவை வெளியிட வாய்ப்புள்ளதாக தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இன்று  நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி டி. கே. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகளில் 3 நாட்களுக்கு முன் நடைபெற்ற சிபிஐ சோதனை குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வருகிற 30ம் தேதி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.

இந்த விழா குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

.

மூலக்கதை