ஆண்டிபட்டியில் வெயிலின் தாக்கம்...அதிகரிப்பு :தண்ணீரின்றி தவிக்கும் ஆடுகள்

தினமலர்  தினமலர்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி மலைக்கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் தண்ணீரின்றி தாகத்தில் தவிக்கின்றன.
ஆண்டிபட்டி தாலுகாவின் பல்வேறு கிராமங்களில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ளது. அவற்றில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், பால்மாடுகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர்நரசிங்கபுரம், சித்தார்பட்டி, தெப்பம்பட்டி, வேலப்பர்கோயில், பாலக்கோம்பை உட்பட பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஆடுகள் உள்ளன.
தினமும் அவற்றை மேய்ச்சலுக்காக பல கி.மீ.,துாரம் ஓட்டிச்செல்லப்படும். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடரும் வறட்சியால் புல் பூண்டுகள் காய்ந்து விட்டன. விவசாய நிலங்கள் உழவு செய்து விதைப்புக்கு தயார் நிலையில் இருப்பதால் தீவன தட்டுப்பாடு அதிகம் உள்ளது. குளங்கள், கண்மாய்கள் காய்ந்து கிடப்பதால், தண்ணீர் தேவைக்கும் திண்டாடும் நிலை உள்ளது.
தற்போது சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் அவற்றின் உடல் நிலை பாதிக்கப்படும் என்பதால் பகல் நேரத்தில் ஆடுகளை மர நிழலில் ஓய்வெடுக்க செய்கின்றனர். ஆடு வளர்ப்பவர்கள் தெரிவித்ததாவது:காலையில் வெயில் தாக்கம் துவங்கும் முன்பே குறிப்பிட்ட பகுதியில் ஆடுகள் மேய்ந்து விடும். மதியம் 12:00 முதல் மாலை 3:00 மணி வரையில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும். அப்போது எளிதில் சோர்வடைந்து அவற்றின் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்க, ஆடுகளை மர நிழலில் இருக்கச்செய்து விடுகிறோம், என்றனர்.

மூலக்கதை