பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில்...பாதியில் நிற்பதால்... பரிதவிப்பு!பாதிப்பை தவிர்க்க திட்டமிடல் அவசியம்

தினமலர்  தினமலர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் பாலக்காடு - திருச்செந்துார் பயணிகள் ரயில், பல மாதங்களாக பெரும்பாலான நாட்கள் திருச்செந்துார் செல்வதில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் திருச்செந்துார் ரயில் (எண் 56769) தினமும் அதிகாலை, 4:20 மணிக்கு பாலக்காட்டில், 6:00 மணிக்கு பொள்ளாச்சியை கடந்து, பழநி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக மாலை, 4:00 மணிக்கு திருச்செந்துாரை அடைகிறது.எதிர் மார்க்கமாக, (ரயில் எண் 56770) காலை, 11:10 மணிக்கு திருச்செந்துாரில் புறப்பட்டு, இரவு, 9:00 மணிக்கு பொள்ளாச்சியை அடைகிறது.திருச்செந்துார் கோவிலுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி, தென்மாவட்ட மக்களுக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.பஸ் கட்டடணத்தை விட ரயிலில் குறைந்த கட்டணம் என்பதால், பொதுமக்கள் அதிகளவில் பயணிப்பதை விரும்புகின்றனர்.இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக வாரத்தின் பெரும்பாலான நாட்கள் இந்த ரயில் திருச்செந்துார் செல்வதில்லை.மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமான பணிகள் நடப்பதாக கூறி, ரயில் பாதி வழியில்நிறுத்தப்படுகிறது.வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே திருச்செந்துார் வரை இயக்கப்பட்டது. கடந்த மாதம், 30 தேதிக்கு பின், அனைத்து நாட்களும் ரயில் திருச்செந்துார் செல்லும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்தது.ஆனால், சில நாட்களிலேயே எவ்வித முன்னறிவிப்புமின்றி, மறுபடியும் ரயில் பாதி வழித்தடத்தில் நிறுத்தப்பட்டது.
திருச்செந்துார் செல்ல திட்டமிட்டு, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் சென்ற போது தான், ரயில் திருச்செந்துார் செல்லாது என்பது தெரிவிக்கப்படுகிறது. இதனால், நுாற்றுக்கணக்கான பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.பாலக்காடு - திருச்செந்துார் ரயிலின் முக்கியத்துவம் கருதி, அதன் பயணத்திட்டம் பாதிக்காத வகையில் மதுரை கோட்டம் கட்டுமான பணிகளை திட்டமிட வேண்டும்.தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணத்திட்டத்தில் மாற்றம் செய்ய நேரிட்டால், அதை முன்கூட்டியே பத்திரிகை செய்தியாக அறிவிக்க வேண்டும் என பயணிகள்வலியுறுத்துகின்றனர்.
முக்கிய நாட்களில் இயக்கணும்!
ரயில்வே ஆர்வலர்கள் கூறுகையில், 'பெரும்பாலான மக்கள் வார இறுதியில் தான் திருச்செந்துார் பயணம் மேற்கொள்கின்றனர். சனிக்கிழமை காலையில் பொள்ளாச்சியில் புறப்பட்டு, ஞாயிறு காலை தரிசனம் முடித்து, அன்றே திரும்பி வருகின்றனர்.மேலும், திருச்செந்துார் குரு பகவான் ஸ்தலம் என்பதால், வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்யவும் விரும்புவர். இதனால், புதன், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்செந்துாருக்கு ரயில் இயங்க மதுரை, பாலக்காடு கோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

மூலக்கதை