வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் இடமாற்றம் வரவேற்று நடந்த பார்ட்டியில் ரகளை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் இடமாற்றம் வரவேற்று நடந்த பார்ட்டியில் ரகளை

வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனை டீன் இடமாற்றம் செய்யப்பட்டதை வரவேற்று நடந்த மதுவிருந்தில் ரகளை ஏற்பட்டு அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். வேலூர் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாந்திமலர் கடந்த வாரம் விருப்ப மாறுதல் பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக பொறுப்பேற்றார்.

இவர் பணிக்காலத்தின்போது நோயாளிகள் முதல் கடைநிலை ஊழியர் வரையில் கனிவான அணுகுமுறை, தரமான சிகிச்சையை உறுதி செய்தல், பணியாளர்களின் நேரம் தவறாமை, மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி வளாகங்களின் சுகாதாரமான சூழல் போன்றவற்றில் மிகுந்த அக்கறை காட்டினாராம். மேலும் டீனில் கட்டுப்பாடு காரணமாக சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் டீன் சாந்திமலர் இடமாற்றம் பெற்றதை வரவேற்று பணியாளர்கள் சிலர் அன்றிரவு மருத்துவமனை வளாகத்தில் விரிவுரையாளர் அரங்கின் வெளியே மது விருந்துடன் கொண்டாடியுள்ளனர்.

போதை ஏறியதும் கட்டிடத்தின் கதவுகளில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சத்தம் கேட்டு வந்த செக்யூரிட்டி ஓடிவந்து பார்த்து தட்டிக்கேட்டுள்ளார்.

இதன்பிறகு போதையில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். மறுநாள் தற்காலிக டீன் பொறுப்பு வகித்தவர் பணியில் இருந்த செக்யூரிட்டியிடம் நடத்திய விசாரணையில், 3 பணியாளர்கள் விவரம் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ‘இந்த விஷயத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தற்போது பொறுப்பேற்றுள்ள டீன் செல்வி, காவல்துறையில் புகார் அளிப்பதுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

.

மூலக்கதை