மாவட்டத்தில் பள்ளி சீருடை தைக்கும் பணி தீவிரம்: 1.56 லட்சம் மாணவர்களுக்கு தயாராகிறது

தினமலர்  தினமலர்
மாவட்டத்தில் பள்ளி சீருடை தைக்கும் பணி தீவிரம்: 1.56 லட்சம் மாணவர்களுக்கு தயாராகிறது

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 56 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இலவச சீருடைகள் தைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழக அரசு சார்பில், முதலாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள், காலணிகள் வழங்கப்படுகிறது.மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க பத்தாம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, முதலாம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை புத்தகப்பை, இலவச பஸ் பயண அட்டை, பாடநுால்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது.பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்-டாப், பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள், முதலாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக இலவச சீருடை துணிகள் வரவழைக்கப் பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் 77 ஆயிரத்து 979 மாணவர்கள், 78 ஆயிரத்து 267 மாணவிகள் உட்பட ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 246 பேருக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக மாவட்ட துணி வெட்டும் தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு, 22 ஆயிரத்து 445 மீட்டர் பச்சை நிற துணி மற்றும் 24 ஆயிரத்து 750 மீட்டர் சந்தன நிற துணி அனுப்பி வைத்தனர்.இங்கு, மாணவர்களுக்கான சீருடை துணிகள் வெட்டும் பணியை, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின், சீருடை துணிகள் அனைத்தும், கடலுார், கீரப்பாளையம், சிதம்பரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மகளிர் தொழிற் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அந்தந்த மகளிர் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் துணிகளை ஒப்படைத்து, சீருடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, கடலுார் மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 800 பேர், சிதம்பரம் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 700 பேர் மற்றும் கீரப்பாளையம் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 625 பேர் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், பள்ளி சீருடைகள் தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பெரும்பாலான உறுப்பினர்கள், தயாரான சீருடைகளை, மாவட்ட சங்கத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இவை, மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் மூலம், விரைவில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

மூலக்கதை