சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடிக்கு 2வது நாளாக இன்றும் சிகிச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடிக்கு 2வது நாளாக இன்றும் சிகிச்சை

சென்னை : சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 2வது நாளாக இன்றும் சிகிச்சை நடந்தது. அவர் உடம்புக்கு என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், பல்வலி, தொண்டை, வயிறு, இதயம் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

இந்ந நிலையில் முதல்வருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நேற்று தலைமை செயலகத்தில் தண்ணீர் பிரச்னை குறித்தான ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை 7 மணிக்கு சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று விட்டு உடனடியாக வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து 2வது நாளாக இன்று காலை 6. 30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பரிசோதனை முடிந்து இரண்டு மணி நேரத்தில் மீண்டும் வீடு திரும்பினார்.

இதையடுத்து முதல்வர் நேற்றும், இன்றும் தலைமை செயலகம் வரவில்லை.

முதல்வர் உடலுக்கு என்ன பிரச்னை என்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அப்போலோ மருத்துவமனையில் இருந்தும் முதல்வருக்கு என்ன பரிசோதனை செய்யப்பட்டது? என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது, முதல்வருக்கு சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட பல்வலி மற்றும் தொண்டையில் ஏற்பட்ட பிரச்னைக்கு என்டோஸ்கோப்பி பரிசோதனை, குடல் மற்றும் இதய நோய் சம்பந்தப்பட்ட பரிசோதனை உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை