உதாரணம்!பொதுப்பணித்துறையின் மோசமான நிர்வாகத்திற்கு வேளச்சேரி ஏரி...புகார்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
உதாரணம்!பொதுப்பணித்துறையின் மோசமான நிர்வாகத்திற்கு வேளச்சேரி ஏரி...புகார்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பொதுப்பணித் துறையின் மோசமான நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு, வேளச்சேரி ஏரி.
சென்னையின் பிரதான நீர்நிலையான இந்த ஏரியை பராமரிக்கும் பொறுப்பு, படப்பை பாசன பிரிவு உதவி பொறியாளர் குஜராஜ், காஞ்சிபுரம் மாவட்ட உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வசம் உள்ளது.இதில், உதவி பொறியாளர் அலுவலகம், வேளச்சேரி ஏரியில் இருந்து, 40 கி.மீ., துாரத்தில் உள்ள படப்பையிலும், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், ஏரியில் இருந்து, 55 கி.மீ., துாரத்தில் உள்ள, செங்கல்பட்டிலும் உள்ளது. இவ்வளவு துாரத்தில் அலுவலகம் இருந்தபோதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவரும், வேளச்சேரி ஏரியை எட்டிக்கூட பார்ப்பதில்லை. ஆக்கிரமிப்பு உட்பட, ஏரி சம்பந்தமாக பொதுமக்கள் புகார் அளித்தால் கூட, இந்த அதிகாரிகள் நேரில் சென்று பார்ப்பதில்லை.பொதுப்பணித் துறையின் பார்வையே இல்லாததால், வேளச்சேரி ஏரி முழுவதுமாக, ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.தி.மு.க., - அ.தி.மு.க., என, இரண்டு கட்சி பிரமுகர்களும், வேளச்சேரி ஏரியை, கூறு போட்டு விற்று வருகின்றனர். நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள நீர்பிடிப்பு பகுதிகளை காப்பாற்றும் எண்ணம் கூட, அரசுக்கு இல்லை.இதனால் ஒட்டுமொத்த வேளச்சேரி மக்களும், அரசின் மீது, கடும் அதிருப்தியில் உள்ளனர். வேளச்சேரி ஏரி குறித்து கேட்க தொடர்பு கொண்ட போது, அரசின் உத்தரவை மீற முடியாததால், குஜராஜ், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருமே, நிருபரின் அழைப்பை எடுக்கவில்லை.இருப்பினும், நம் நிருபர் படை நடத்திய கள ஆய்வோடு, வேளச்சேரி பகுதி நீர்நிலை ஆர்வலர்களின் கருத்துகளையும் கேட்டு, வேளச்சேரி ஏரியின் நிலை, கட்டுரையாக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர் பிடியில் வேளச்சேரி ஏரிஓட்டு வங்கி அரசியலால் அரசு, 'கப்சிப்!'
-- நமது நிருபர்- -

சென்னையின் முக்கிய நீர்நிலையான, வேளச்சேரி ஏரி, 265.48 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. அரசு கையகப்படுத்தியது மற்றும் ஆக்கிரமிப்பு போக, தற்போது, 55 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.ஏரி ஆக்கிரமிப்பில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் பங்கு அதிகம். கட்சி ரீதியாக சண்டை போடும் இவர்கள், ஏரி ஆக்கிரமிப்பில், 'மாமா - மச்சான்' என, உறவு கொண்டாடுகின்றனர். தற்போதும், 2 - 5 லட்சம் ரூபாய் வரை பெற்று, ஏரியில் வீடு கட்ட அனுமதிக்கின்றனர்.ஏரியை துார்வாரி, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஏரியை சுற்றிலும் உள்ள, நான்கு திசைகளில் இருந்தும் வரும் கழிவுநீர், ஏரியில் தான் கலக்கிறது. 8 அடி ஆழத்திற்கு, சகதி உள்ளது.கோடையிலும், இந்த ஏரி வற்றாததற்கு காரணம், பூமிக்குள் நீர் இறங்குவதில்லை. இதனால், சுற்றுவட்டார பகுதியில், நிலத்தடி நீர் மட்டம், அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.ஏரியை மூடி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைத்த பகுதியில் கூட, நிலத்தடி நீர் இல்லாமல், அங்கு வசிப்போர் சிரமப்படுகின்றனர்.விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட எல்லையில், வேளச்சேரி ஏரி உள்ளது. ஆனால், ஏரி பாதுகாப்பு, காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறையிடம் உள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட எல்லையின் கடைக்கோடியில் இது உள்ளதால், எந்த அதிகாரியும், ஏரியை எட்டி பார்ப்பதில்லை.கடந்த, 2015ல், 65 லட்சம் ரூபாய் செலவில், 1,400 அடி நீளத்தில், நடைபயிற்சி பாதை அமைத்தனர். இது தான், 50 ஆண்டுக்கு பின், ஏரிக்காக, பொதுப்பணித்துறை ஒதுக்கிய நிதி. அவ்வப்போது, மாநகராட்சி சார்பில், ஆகாய தாமரை அகற்றப்படும்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்தபோது, ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டது. அதேபோல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.இந்த இரண்டு நடவடிக்கைக்கும், ஏரியை கூறு போட்டு பணம் சம்பாதித்த, உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் தடை போட்டனர்.மேலும், நிர்வாக ரீதியாக, சென்னை மாவட்டத்தில் இணைத்து, மாநகராட்சி வசம் ஏரியை ஒப்படைக்க, முயற்சி நடந்தது. இதுவும், அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. காரணம், 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்தால், 70 கி.மீ., துாரம் பயணம் செய்து, எந்த அதிகாரியும் வரமாட்டார்கள்; இஷ்டம் போல், ஏரியை துண்டாடலாம்; பணம் சம்பாதிக்கலாம்' என, போட்ட கணக்கு தான்.
நீர்நிலை ஆர்வலர்கள், 2013ல், ஏரியை துார் வார முன் வந்தனர். அரசியல்வாதிகளின் மறைமுக மிரட்டலால், அவர்கள் பின் வாங்கினர்.அதேபோல், 2014ல், நீர்நிலை ஆர்வலர்களுடன் சேர்ந்து, வேளச்சேரியில் உள்ள சில நலச்சங்கத்தினர், துார்வார முயன்றனர். அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள், தொடர்ந்து கொடுத்த பிரச்னையால், அவர்களும் பின் வாங்கினர். அதிகாரிகளையும், ஒத்துழைப்பு வழங்க விடாமல் பார்த்துக் கொண்டனர்.வேளச்சேரி பகுதி, மால், நட்சத்திர ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என, அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கு ஏற்ப, தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது.ஏரியை மீட்டு, கழிவுநீர் கலக்காமல், மழைநீரை முறையாக சேமித்தால், வேளச்சேரி பகுதியின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், மிக முக்கிய ஆதாரமாக, வேளச்சேரி ஏரி இருக்கும்; நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.வேளச்சேரி பகுதியின் தண்ணீர் தேவை மற்றும் நீர் ஆதாரத்தை ஆராய்ந்து, அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை கொடுக்காததன் விளைவு தான், ஏரி நாசமாக காரணம்.'தைரியமான, நேர்மையான அதிகாரிகள் இருந்தால், ஏரியை எப்போதோ நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்க முடியும்' என, பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
வேளச்சேரி ஏரியை துார்வார, பல முயற்சி எடுத்தோம். ஆக்கிரமிப்பாளர்கள், அரசியல்வாதிகள் நெருக்கடியால், தோல்வி தான் பரிசாக கிடைத்தது. ஏரியை சுற்றி வசிப்பவர்களையும், மிரட்டி வைத்துள்ளனர். நீர்நிலை ஆர்வலர்களை உள்ளே விடுவதில்லை. அரசு தான், இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து, ஏரியை காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்கினால், முடிந்த அளவு, ஏரியை பாதுகாக்க தயாராக உள்ளோம்.-எஸ்.குமாரராஜா, 60, துணைத் தலைவர்வேளச்சேரி நலவாழ்வு சங்கங்களின் கூட்டமைப்பு
நிர்வாக பிரிவை மாற்றலாமே!
பொதுப்பணித் துறையில், 20 ஆண்டுகளுக்கு முன், கட்டட பிரிவில் இருந்து, நீர்வள ஆதார பிரிவு பிரிக்கப்பட்டது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சென்னை மாநகராட்சியின் எல்லையில் இருந்த வேளச்சேரி ஏரியை, படப்பை பாசன பிரிவோடு, அதிகாரிகள் சேர்த்தனர். இதுவே, ஏரி பாழாக காரணம்.சென்னை நீர்வள ஆதார பிரிவு அல்லது பரங்கிமலையில் உள்ள, அடையாறு வடிநில கோட்ட பிரிவு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், இந்த ஏரியை கொண்டு வந்திருந்தால், புகார்கள் மீது, அதிகாரிகள் உடனுக்குடன் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுத்திருக்க முடியும். நிர்வாக பிரிவை மாற்றும் எண்ணம் கூட, அதிகாரிகளுக்கு இதுவரை இல்லை. மாறாக, சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைத்தால், ஓரளவு சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதே, நீர்நிலை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மூலக்கதை