சென்னை வியாசர்பாடியில் நள்ளிரவு போலீஸ் வேட்டை... பிரபல ரவுடி சுட்டுக் கொலை : பட்டாக்கத்தியால் தாக்கியதில் 4 போலீசார் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை வியாசர்பாடியில் நள்ளிரவு போலீஸ் வேட்டை... பிரபல ரவுடி சுட்டுக் கொலை : பட்டாக்கத்தியால் தாக்கியதில் 4 போலீசார் படுகாயம்

சென்னை : வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி நள்ளிரவு தேடுதல் வேட்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். போலீசாரை தாக்கியதால், தற்காப்புக்காக போலீசார் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை வியாசர்பாடி, தேசிகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வல்லரசு (20). பிரபல ரவுடி.

இவர்மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புளியந்தோப்பு, ஓட்டேரி, வியாசர்பாடி, எம்கேபி நகர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியன்று நடந்து சென்ற 6 பேரை வழிமறித்து, பட்டாக்கத்தியால் வெட்டி நகை, பணம் பறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இவ்வழக்குகள் தொடர்பாக இவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் வியாசர்பாடி, எம். எம். கார்டன் பகுதியில் பொதுமக்களிடம் வல்லரசுவை கத்தியை காட்டி மிரட்டுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின்பேரில் தலைமை காவலர் பவுன்ராஜ், காவலர் ரமேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அடிதடி தகராறில் ஈடுபட்டு பொதுமக்களை பட்டாக்கத்தியால் தாக்கிய வல்லரசுவை இருவரும் பிடிக்க முயற்சித்தனர்.

அப்போது தலைமை காவலர் பவுன்ராஜுக்கு தலையில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து காவலர் ரமேஷை துரத்தி சென்று வல்லரசு சரமாரியாக தாக்கினார்.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ரவுடி வல்லரசு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து தகவலறிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் எம்கேபி நகர் மில்லர், புளியந்தோப்பு ரவி தலைமையில் எஸ்ஐக்கள் பிரேம்குமார், தீபன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த தலைமை காவலர் பவுன்ராஜ், காவலர் ரமேஷ் ஆகிய இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மாதவரம் புதிய பேருந்து நிலையம் அடுத்த சிஎம்டிஏ லாரி நிற்கும் வளாகம் பின்புறம் ரவுடி வல்லரசு பதுங்கியிருப்பதாக நள்ளிரவு 2 மணியளவில் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தனிப்படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்கு மற்றொரு ரவுடியான கதிர் என்பவருடன் வல்லரசு மது அருந்தி கொண்டிருந்தான். அங்கு போலீசார் வருவதை பார்த்ததும் கதிர் தப்பி ஓடிவிட்டார்.

போலீசாரை பார்த்து ஆத்திரமடைந்த ரவுடி வல்லரசு, தன்னிடம் இருந்த பட்டாக்கத்தியால் தனிப்படை போலீசாரை சரமாரியாக வெட்டினான். இதில், எஸ்ஐக்கள் பிரேம்குமார் என்பவருக்கு இடது கையிலும், தீபனுக்கு வலது கையிலும் பலத்த வெட்டு விழுந்தது.

மேலும் போலீசாரை தாக்கிவிட்டு வல்லரசு தப்ப முயற்சிக்கவே, இன்ஸ்பெக்டர்கள் மில்லர், ரவி ஆகியோர் ரவுடி வல்லரசுவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் வல்லரசுவின் மார்பில் 2 குண்டுகளும், காலில் ஒரு குண்டும் துளைத்ததால், சம்பவ இடத்திலேயே ரவுடி வல்லரசு ரத்த வெள்ளத்தில் பலியானான்.

பின்னர் படுகாயம் அடைந்த எஸ்ஐக்கள் பிரேம்குமார், தீபன் மற்றும் போலீசாரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று, பலியான ரவுடி வல்லரசுவின் சடலத்தை கைப்பற்றி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தப்பி ஓடிய கதிர் மற்றும் கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ரவுடி வல்லரசுவை போலீசார் சுட்டு கொன்ற சம்பவம் இன்று காலை வியாசர்பாடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ரவுடிகளிடையே பெருத்த பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து 4 போலீசார் சிகிச்சை பெறும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ரவுடி வல்லரசுவின் வீடு மற்றும் வியாசர்பாடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

ஏரியாவில் நுழைந்தாலே அடிதடி

வியாசர்பாடியில் ரவுடி வல்லரசு எப்போதும் 3 அடி நீளமுள்ள பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிவானாம்.

இவன் ஏரியாவுக்குள் நுழைந்தாலே, அங்கு அடிதடி, வெட்டு, குத்து தகராறு நடைபெறுவது வழக்கம். வல்லரசு தனது கூட்டாளிகளான கதிர் உள்ளிட்ட ஒருசிலருடன் அடிக்கடி அடிதடி தகராறில் ஈடுபட்டு, போலீசார் பிடிக்க வருவதை அறிந்து வல்லரசு கூட்டாளிகளுடன் தப்பி ஓடிவிடுவாராம்.

இதேபோல், நேற்று நள்ளிரவில் தன்னை தனிப்படை போலீசார் பிடிக்க முயற்சித்த ஆத்திரத்தில், தன்னிடம் இருந்த பட்டாக்கத்தியால் சரமாரியாக தாக்கியிருக்கிறான். இதையடுத்து போலீசாரின் உயிரை பாதுகாக்க, 2 இன்ஸ்பெக்டர்களும் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு வல்லரசுவை பிடிக்க முயற்சித்துள்ளனர்.

எனினும், வல்லரசு துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகிவிட்டான் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

என்கவுன்டர் சரியா?

வியாசர்பாடியில் ரவுடி வல்லரசு என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சென்னை நகரில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள், வயதானவர்கள் சாலைகளில் தனியே நடந்து செல்ல முடியவில்லை.

இரவு நேரங்களில் செயின் பறிப்பு, வழிப்பறி, பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தந்த பகுதிகளில் காவல்துறை எத்தனை சிசிடிவி காமிராக்கள் பொருத்தி கண்காணித்தாலும், அவர்களால் குற்றச் சம்பவங்களை அதிகளவு தடுக்க முடியவில்லை.

குறிப்பாக வியாசர்பாடி, எம்கேபி நகர், செம்பியம், புளியந்தோப்பு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் ரவுடிகளின் அராஜகம் அதிகரித்துள்ளது.

ரவுடிகளை போலீசார் கைது செய்தபோது, அவர்கள் மீண்டும் ஜாமீனில் வெளிவந்து தங்களது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர். இதுபோன்ற ரவுடிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டால்தான், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் வெகுவாக குறையும்.

வெளியூர்களில் பெண் பார்க்கும் படலத்தின்போது, வியாசர்பாடி என்ற பெயரை ெசான்னாலே, அது ரவுடிகளின் புகலிடம் என்ற தப்பான அபிப்பிராயம் நிலவி வருகிறது. இதனால் அவர்கள் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ பெரிதும் தயங்குகின்றனர்.

சென்னை நகரில் உலவிவரும் ரவுடி கும்பல்களின் நடமாட்டத்தை கண்காணித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் அவர்களின் அராஜக செயல்களை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


.

மூலக்கதை