குற்றவாளிகளை பிடிக்க போலீசில் ஐசிஜேஎஸ் சிஸ்டம் தொடக்கம்: ‘’எங்கு சென்றாலும் தப்ப முடியாது’’

தமிழ் முரசு  தமிழ் முரசு
குற்றவாளிகளை பிடிக்க போலீசில் ஐசிஜேஎஸ் சிஸ்டம் தொடக்கம்: ‘’எங்கு சென்றாலும் தப்ப முடியாது’’

வேலூர்: குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையில் ஐசிஜேஎஸ் சிஸ்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருடர்கள் எங்கிருந்தாலும் சிக்கிக்கொள்வார்கள்.

நாடு முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்நிலையங்கள் உள்ளன. மொத்தம் 15,85,117 பேர் பணியாற்றி வருகின்றனர்.

பெண் போலீசார் மட்டும் 84,479 பேர் உள்ளனர். முற்றிலும் மகளிரை கொண்ட அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் 499 உள்ளன.

தமிழகத்தில் சுமார் 1,500 காவல்நிலையங்களில் 1. 25 லட்சம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதில் பெண் போலீசார் 10,118 பேர் பணியாற்றி வருகின்றனர்.

கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபட்டுவந்த நிலை மாறி,

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கியிருந்து, கை தொழில் செய்வது போல் பாவ்லா காட்டி இரவில் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்செல்லும் நிலை தொடர்கிறது. இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பட்டியலின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்புகள் மட்டுமே தமிழக காவல்துறை பிரிவு மூலம் பார்க்க முடியும். எனவே கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ரவுடிசம், கேடி, சர்வதேச குற்றவாளிகள் என்று தனித்தனியாக பிரித்து அவர்களது புகைப்படங்கள், குற்றவிவரங்கள் கணினியில் அப்டேட் செய்யும் பணிகள் நடந்து வந்தது.

இந்தநிலையில் ஐசிஜேஎஸ் (interoperable criminal justice system) இந்த பணிகள் கடந்த மாதத்துடன் முடிந்தது. எனவே வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் கொள்ளை,

திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு தப்பிச்சென்றாலும் அவர்களது புகைப்படங்களை ஐசிஜேஎஸ் சிஸ்டத்தில் ஒப்பிட்டு பார்த்தால் குற்றவாளிகள் குறித்த முழுவிவரங்களும் தெரிந்துவிடும்.

இதன் மூலம் குற்றவாளிகள் இனி ஓடவும், ஒளியவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐசிஜேஎஸ் சிஸ்டம் கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.

எனவே இனி வடமாநிலத்தவர்கள், தமிழகத்தில் குற்றசம்பவங்களில் ஈடுபட்டிருந்து சிக்கினால், அம்மாநில காவல்துறையினரிடம் விவரங்கள் கேட்டு கடிதம் அனுப்பி மாதக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை.

காவல்நிலையத்தில் உள்ள கணினியில் புகைப்படத்தை அப்டேட் செய்தால் உடனே குற்றவாளிகள் தொடர்பான முழுவிவரங்கள் தெரிந்துவிடும்.

.

மூலக்கதை