இதுவும் ஒரு திருப்பணி! மூளிக்குளத்தை தூர்வார முன்வரலாம்

தினமலர்  தினமலர்
இதுவும் ஒரு திருப்பணி! மூளிக்குளத்தை தூர்வார முன்வரலாம்

திருப்பூர்:-புதர்மண்டியுள்ள ராஜவாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்து, ஆகாயத்தாமரையை அகற்றி, மூளிக்குளத்தை பாதுகாக்க, இயற்கை ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.திருப்பூர் மாநகராட்சியின், மேற்கு எல்லையில் ஆண்டிபாளையம் குளமும், கிழக்கு எல்லையில், மூளிக்குளமும் உள்ளன. மூளிக்குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், குளம் புனரமைப்பு பணி நடப்பதே இல்லை.
ஊராட்சி நிர்வாகம் துார்வாரி சுத்தம் செய்து, கரைகளில் மரக்கன்றுகள் நட்டு வைத்தது. அதற்கு பிறகு, தன்னார்வ அமைப்புகள், அவ்வப்போது, குளத்தை துார்வாரி சுத்தம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி என்பதால், குளம் பராமரிப்பு பணி கிடப்பில் போடப்பட்டது.அணைக்காட்டில் இருந்து செல்லும் ராஜவாய்க்கால், இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு புதர்மண்டி கிடக்கிறது. ஆற்றில், மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், குளத்துக்கு சுத்தமான தண்ணீரை திருப்பிவிடலாம்.கழிவுநீர் குளத்துக்கு செல்லாமல் தடுக்க, ஷட்டர் வசதி உள்ளது. இருப்பினும், ராஜவாய்க்கால் புதர்மண்டி கிடப்பதால், குளத்துக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. குளத்தில் தற்போது தண்ணீர் நின்றாலும் கூட, மழைவெள்ளத்தை தேக்கினால், நிலத்தடி நீர் சுத்தமாக இருக்கும்.குளம் முழுவதும் படர்ந்திருந்த ஆகாயகத்தாமரை, தற்போது குளத்தில் கிழக்கே தேங்கியுள்ளது.
செடிகள் முழுமையாக வறண்டு போயுள்ளன. இந்நிலையில், பசுமை ஆர்வலர்கள் முயற்சி எடுத்து, குளத்து துாய்மைப்படுத்த முன்வர வேண்டுமென மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், மழைநீரை குளத்தில் தேக்கி வைக்க, பசுமை ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.பருவமழை துவங்கியுள்ள இத்தருணத்தில், குளத்தை துார்வாரினால், மழைநீர் பெருமளவில் தேங்கும். அதனால், நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.

மூலக்கதை