ரூ. 1.90 கோடி செலவில் இலவச ஸ்மார்ட் பஸ் பாஸ் தயாரிக்க போக்குவரத்து அதிகாரிகள் திட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ரூ. 1.90 கோடி செலவில் இலவச ஸ்மார்ட் பஸ் பாஸ் தயாரிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 

தமிழகம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரிக்கு செல்வோருக்கு அரசு இலவச பஸ் பாஸ்களை வழங்கி வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்திற்குள் பாஸ் கொடுக்கப்பட்டு விடும். ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயனடைந்து வருகிறார்கள். 

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே, மாணவர்களுக்கு இம்முறை  பஸ் பாஸ்களை விரைவில் வழங்கும் பணியில் அதிகாரிகள் வேகம் காட்டி வருகின்றனர். ரூ.1.90 கோடி செலவில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளனர். 

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை; ஐடிஐ, அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எளிதாக பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் வகையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 3,60,000 பஸ் பாஸ்களும், விழுப்புரம்-4,70,435; சேலம்- 2,94,800; கோவை-3,40,000; கும்பகோணம் - 3,76,558; மதுரை- 3,30,000; திருநெல்வேலி-2,49,555 என மொத்தமாக 24,21,348 பஸ் பாஸ்கள் இந்தாண்டு வழங்கப்பட உள்ளது. 

இம்முறை,மாணவர்களின் விவரம் அனைத்தும் அடங்கிய பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.1.90 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது. விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை