திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் பாராட்டு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் பாராட்டு!

திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் பாராட்டினார்.

தமிழ்ச்சங்கங்கள் பல்வேறு பகுதிகளில் தமிழுக்காகச் சிறப்பாகச் சேவையாற்றி வருகின்றன. தமிழ் மொழி பேசாத மாநிலங்களில் கூட தமிழ்ச் சங்கங்கள் தமிழ் வளர்க்கும் அரும்பணி செய்து வருகின்றன.

அந்த வகையில் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கமும் 1963-ல் தொடங்கப்பட்டு மிகவும் சிறந்து விளங்கி வருகின்றது. தமிழ்ப் பணிகளையும், சமூகநலப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இச்சங்கத்தை தமிழக அரசு, மிகச் சிறந்த தமிழ்ச் சங்கம் எனப் பாராட்டி விருதும் வழங்கியுள்ளது. அதுமட்டுமல்ல, இந்தத் தமிழ்ச் சங்கம் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது. சங்க நூலகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள நூல்கள் இடம்பெற்று உள்ளன.

தமிழ்ச்சங்கம் சார்பில், மாதந்தோறும் கவியரங்கம், கதையரங்கம், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளை நடத்தி வருவதுடன், 'கேரளத் தமிழ்' என்னும் மாத இதழும் தொடர்ந்து 40 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டு இருக்கிறது.

பாரதி விழா, பொங்கல் விழா எனப் பல விழாக்களை நடத்தி வருவதும் தமிழ்ச்சங்கச் சிறப்பு ஆகும். நிலா விருந்து என்னும் நிகழ்வு ஆண்டு தோறும் நடக்கிறது. குடும்பத்துடன் இன்னிசை கேட்டு, இரவு உணவை உட்கொள்ளும் நிகழ்வு சிறப்பானது ஆகும். இதில் அரசியல்வாதிகள், இலக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுச் சிறப்பிப்பது ஆண்டு தோறும் நடக்கிறது.

பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை இச்சங்கத்திற்கு உண்டு.அண்மையில் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

இதில் சங்கப் பொதுச் செயலாளர் மு.முத்துராமன், துணைத் தலைவர் சூரியகுமாரி, தமிழகத்தில் இருந்து அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்  முனைவர் கணநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர்  முனைவர் கு.சிதம்பரம், கலந்தாய்வில் கலந்து கொண்டு,  சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்துப் பாராட்டிப் பேசினார்.

மூலக்கதை