தமிழக கோவில்களில் மழைக்காக யாகம் நடத்த அறநிலையத்துறை உத்தரவு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 தமிழகத்தில் மழைக்காக யாகம் நடத்த கோவில் நிர்வாகங்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது.


மழைபெய்து நாடு செழிக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே யாகம் நடப்பது வழக்கம்.  அதன்படி அறநிலையத்துறையின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில் யாகம் நடத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 


கோயில்களில் உள்ள நந்தியை சுற்றி தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர்நிரப்பி வழிபாடு செய்யவும்  அறிவுரை தரப்பட்டு உள்ளது. 


நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களுடன் அமிர்த வர்ஷினி, மேக வர்ஷினி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு நடத்துமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


சிவாலயங்களில் சிவனுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் வழிபாடு செய்யவும், விஷ்ணு கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது. 
மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யுமாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. வருண காயத்ரி, வருண சூக்த வேத மந்திரங்களை பாராயணம் செய்யவும் கோயில்களுக்கு கூறப்பட்டு உள்ளது. 


மேலும் ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமுறை ஓதுதல் மற்றும் பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து அபிஷேகம் நடத்துதல் போன்றவற்றிற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 
எந்தெந்த தேதிகளில் யாகம் நடத்தப்படுகிறது என்ற பட்டியலை இந்து அறநிலையத்துறை தனது சுற்றறிக்கையில் தெரிவித்து உள்ளது. 

மூலக்கதை