புதுமை, படைப்புத்திறன் இருந்தால்...சாதிக்கலாம்! நெசவாளருக்கு காத்திருக்கும் வாய்ப்பு

தினமலர்  தினமலர்
புதுமை, படைப்புத்திறன் இருந்தால்...சாதிக்கலாம்! நெசவாளருக்கு காத்திருக்கும் வாய்ப்பு

திருப்பூர்:புதுமை மற்றும் படைப்புத்திறன் இருந்தால், திருப்பூர் நெசவாளர்களும் சாதிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.காதி மற்றும் கிராம தொழில் வாரியம், மத்திய பட்டு வாரியம், தேசிய பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்புடன் இணைந்து, 'உலக நெசவாளர் அமைப்பை', எப்.ஐ.சி.சி.ஐ.,(இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு) பெண்கள் அமைப்பு ஏற்படுத்திஇருக்கிறது.
உலகச்சந்தையில் கையால் நெய்யக்கூடிய ஆடைகளுக்கு இருக்கும் மதிப்பை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைத்தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக்குமான தளத்தை உருவாக்குவதே இந்த அமைப்பின் நோக்கம்.வர்த்தகர்கள், சில்லரை வணிகர்கள், பேஷன் மற்றும் ஜவுளி வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், புதுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைத் தயாரிப்புகளை, சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இது உதவும்.எப்.ஐ.சி.சி.ஐ., பெண்கள் அமைப்பின் சேர்மன் ரீனா அகர்வால் கூறுகையில், 'இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு பணி மேற்கொள்வோம்.
மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதிக்கான தயாரிப்புகளை உருவாக்குவதற்கு புதிய வடிவமைப்புகள் உருவாக்கம், புதுமைத் தயாரிப்புகள் தேவை. அதை வலிமைப்படுத்துவதற்கான மதிப்புச்சங்கிலியை வடிவமைப்பு பயிற்சி மையங்களுடன் கைத்தறி கிளஸ்டர்கள் இணைந்து மேற்கொள்வதற்கு இது உதவும்' என்றார்.'
கையால் நெய்யப்படும் ஓவன், கை எம்ப்ராய்டரி, கைவினைப் பொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பதன்மூலம், நாட்டில் பெண்களுக்கான அதிகாரம் பரவலாகும். காதி, கைத்தறி பொருட்களை உள்ளூரில் மட்டுமின்றி,வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.' என்கின்றனர், இந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள்.பருத்தி மற்றும் பட்டு கலந்த கதர் உடைகளுக்குத் தேவை அதிகரித்து வருகிறது.
இந்த உடைகளை அணிய, பல்வேறு நாட்டு மக்கள் விரும்புவதால், சர்வதேச வர்த்தகர்கள் இடையே இந்த உடைகளுக்கு அமோக வரவேற்பு உள்ளது.திருப்பூருக்கு உதவுமா?இதுபோன்ற அமைப்பு, திருப்பூர் பகுதி நெசவாளர்களுக்கு உதவினால், உலகளவில் தயாரிப்புகளைக் கொண்டு செல்வதற்கு சிறப்பாக இருக்கும்.குறிப்பாக கைத்தறி நெசவு நலிந்துபோன தொழிலாக மாறியிருக்கிறது. பலர் இத்தொழிலை விட்டு வேறுதொழிலுக்கு சென்று விட்டனர்.

மீண்டும் கைத்தறி நெசவுக்கான மதிப்பு, சர்வதேச அளவில் பெருகி வருகிறது.ஆனால், விழிப்புணர்வு, நெசவாளர்களிடம் இல்லை. திருப்பூர், கோவை மாவட்டங்களிலுள்ள நெசவாளர் அமைப்புகள் இணைந்து, உலக நெசவாளர் அமைப்புடன் இணைந்தால், வெற்றிக்கான வாய்ப்பு கிடைக்கும்.திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறையில், படைப்புத்திறன் மிகுந்த வடிவமைப்பாளர்கள் பலர் உள்ளனர். இவர்களுடைய பார்வை, கைத்தறி மீதும் திரும்பினால், சாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

மூலக்கதை