தயக்கம்! குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி

தினமலர்  தினமலர்
தயக்கம்! குறுவை நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள்...போர்வெல்லின் நீர்மட்டம் சரிந்ததால் விரக்தி

பெண்ணாடம்:பெண்ணாடம் பகுதியில் போர்வெல் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
பெண்ணாடத்தை சுற்றியுள்ள வடகரை, நந்திமங்கலம், தாழநல்லூர், அரியராவி, கோனூர், கணபதிகுறிச்சி, கிளிமங்கலம், மோசட்டை, இறையூர், கொத்தட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி பணி முடிந்து, மார்ச் முதல் வாரத்தில், குறுவை நெல் நடவு பணிக்கு நாற்று விடுவது வழக்கம்.போதிய பருவமழை இல்லாததால் போர்வெல்லின் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், சம்பா நடவு பணிக்கே தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்தனர். தற்போது, குறுவை நடவு பணிக்கு நாற்று விட்ட நிலையில், விவசாயிகள் வயல்களில் டிராக்டர் மூலம் உழவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், நிலத்தடி நீர்மட்டம் சரிவு, அறிவிக்கப்படாத மின்தடை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் நடவுபணியில் ஈடுபட தயக்கம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து, பெண்ணாடம் வேளாண் விரிவாக்க மைய உதவி அலுவலர் அறிவழகன் கூறுகையில், 'பெண்ணாடம் பகுதியில் ஆண்டுதோறும் குறுவை பட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் இருந்து இரண்டாயிரம் ஏக்கர் வரை விவசாயிகள் குறுவை நடவுப்பணி மேற்கொள்வர்.ஆனால், போதிய பருவமழை இல்லாததால் நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் நடவுப்பணி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை' என்றார்.இறையூர் விவசாயி ஒருவர் கூறுகையில், 'கடந்த 2 மாதங்களுக்கு முன் சம்பா அறுவடை பணிகள் முடிந்தது. இம்மாதம் குறுவை நடவு பணிக்கு நாற்று விட்டு, நடவு பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், போர்வெல்லின் நீர்மட்டம் முற்றிலும் சரிந்துள்ளதால் குறுவை பட்டத்தில் நடவுக்கு தண்ணீர் பாய்ச்சி, உழவுப்பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளோம்' என்றார்.

மூலக்கதை