மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்

சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு. க. ஸ்டாலின் இன்று காலை முதல் இரவு வரை சென்னையில் பல்வேறு இடங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வரும் 18ம்தேதி நடைபெறுகிறது.

அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக கடந்த மாதம் 20ம் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கிய மு. க. ஸ்டாலின் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ‘நாடும் நமதே- நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்துடன் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசி வருகிறார். அவரது அனல் பறக்கும் பேச்சு தமிழக வாக்காளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் பேசும் வகையில் அவரது சுற்றுப்பயணம் அமைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 8. 30 மணி முதல் தனது பிரசாரத்தை திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் மு. க. ஸ்டாலின் தொடங்கினார்.

அவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

மக்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு அவர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து காலை 9 மணிக்கு நெல்லிக்குப்பம் சந்திப்பு, காலை 9. 30 மணிக்கு திருப்போரூர் அடுத்த மயிலை கொட்டமேடு சந்திப்பு, 10 மணிக்கு அம்பேத்கர் சிலை அருகே, 10. 30 மணிக்கு பையனூர் ஓ. எம். ஆர். சாலை, மாமல்லபுரம் கங்கைகொண்டான் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.

அவருடன் மாவட்ட செயலாளர் தா. மோ. அன்பரசு உடன் செல்கிறார். அதை தொடர்ந்து, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு. க. ஸ்டாலின் மாலை 3. 30 மணிக்கு மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார்.

ஐஸ் அவுஸ் சந்திப்பில் பிரசார வேனில் நின்று கொண்டு பேசுகிறார். மாலை 4. 15 மணிக்கு புஷ்பா நகரிலும், மாலை 5 மணிக்கு அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூ உள்ளிட்ட இடங்களில் வீதி வீதியாக சென்று பிரசார வேனில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அவருடன் வேட்பாளர் தயாநிதிமாறன், மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் ஆகியோர் செல்கின்றனர்.

அதை தொடர்ந்து, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மாலை 5. 15 மணிக்கு அயனாவரம் கே. எச். ரோடு நூர் ஓட்டல் அருகே பிரசாரத்தை தொடங்கும் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், நியூ ஆவடி சாலை, ஐசிஎப் சிக்னல், கே. எச். ரோடு, ஓட்டேரி பாலம், பிரிக்ளின் சாலை, வெங்கட்டம்மாள் சமாதி சாலை ஆகிய இடங்ளில் பிரசாரம் செய்யும் அவர் தானா தெருவில் பேசுகிறார்.

இதையடுத்து, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, ரெட்டேரி நெடுஞ்சாலை, சைடாம்ஸ் ரோடு, அல்லிகுளம் சாலை, ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை, ஈவ்னிங் பஜார் சாலை, என். எஸ். சி. போஸ் ரோடு, தங்கசாலை தெரு மகாசக்தி ஓட்டல் அருகில், தங்கசாலை மணிகூண்டு உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

இப்பகுதிகளில் மாவட்ட செயலாளர் சேகர் பாபு உடன் செல்கிறார்.

.

மூலக்கதை