தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது: 97 எம்பி பதவிக்கு 1,644 பேர் போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது: 97 எம்பி பதவிக்கு 1,644 பேர் போட்டி

புதுடெல்லி: வரும் 18ம் தேதி நடக்கவுள்ள 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு நாளையுடன் பிரசாரம் முடியும் நிலையில், 97 எம்பி பதவிக்கு 1,644 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் போன்ற தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் உள்ள நிலையில், 6ம் கட்ட தேர்தலுக்கு நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.

நாடு முழுவதும் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. அத்துடன் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா (சில சட்டசபை தொகுதிகளுக்கு) ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டது.

இந்த முதற்கட்ட தேர்தலில் 69. 43 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், 2ம் கட்ட தேர்தல் வருகிற 18ம் தேதி 97 மக்களவை தொகுதிகளுக்கு 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் நடக்கிறது.

அதாவது அசாம் - 5, பீகார் - 5, சட்டீஸ்கர் - 3, ஜம்மு காஷ்மீர் - 2, கர்நாடகா - 14, மகாராஷ்டிரா - 10, மணிப்பூர் - 1, ஒடிசா - 5, தமிழ்நாடு - 39 (18 சட்டசபை தொகுதி உட்பட), புதுச்சேரி - 1, திரிபுரா - 1, மேற்குவங்கம் - 3, உத்தரபிரதேசம் - 8 என, 97 மக்களவைக்கும், ஒடிசா மாநில சட்டசபைக்கு 35 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு அன்றைய தினம் நடக்கவுள்ளது.

மேற்கண்ட மாநிலங்களில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால், தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே 3ம் கட்ட தேர்தல் வருகிற 23ம் தேதி அதிகபட்சமாக 115 தொகுதிக்கு உட்பட்ட 14 மாநிலங்களில் நடைபெற உள்ளதால், அந்த தொகுதிகளுக்கான பிரசாரம் வருகிற 21ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதேபோல், வருகிற 29ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெறும் 9 மாநிலங்களின் 71 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுற்று பிரசாரம் வருகிற 27ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் வருகிற மே 6ம் தேதி 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் நடக்கும் 5ம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில் வருகிற 18ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

6ம் கட்ட தேர்தல் நடக்கும் 59 தொகுதிகளுக்கு நாளை வேட்புமனு துவங்குகிறது. அதன்பின், 7ம் கட்ட தேர்தல் பணிகள் துவங்கவுள்ளன.

இந்நிலையில், வருகிற 18ம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடப்பதால், நேற்று பாஜ சார்பில் பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசத்திலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அசாமிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவிலும் பிரசாரம் மேற்கொண்டனர்.

இன்று, பாஜ தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் குஜராத்தில் நடக்கும் தேர்தல் பிரசார பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர். பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் 2 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதேபோல், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் 2ம் கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இன்றும், நாளையும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

2ம் கட்டமாக நடக்கும் தேர்தலில் 97 மக்களவை தொகுதிகளில் 1,644 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 1,590 வேட்பாளர்களின் ‘அபிடவிட்’ வெளியாகி உள்ளது.

மீதமுள்ள 54 வேட்பாளர்களின் விபரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. இதில், வேட்பாளர்களின் ‘அபிடவிட்’டை ஆய்வு செய்ததில் மொத்த வேட்பாளர்களில் 251 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக கொலை, பெண்கள் மீதான வன்முறை, கடத்தல் போன்ற சீரியஸ் குற்ற வழக்குகளில் 51 வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன. மொத்த வேட்பாளர்களில் 16 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

அதில், பாஜ சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களில் 16 பேர் மீதும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 53 வேட்பாளர்களில் 23 பேர் மீதும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களில் 80 பேரில் 16 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. இதேபோல் பல மாநில கட்சிகளின் சில வேட்பாளர்கள் மீதும் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 11ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது, ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிதடி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றன. அதனால், 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வதால், அதற்கு அடுத்த நாள் வாக்குப்பதிவு இயந்திரம் போன்றவை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாக்குப்பதிவு அமைதியாக நடப்பதை உறுதிசெய்யும் வகையில் போலீசாரின் விழிப்புணர்வு அணிவகுப்பும் நடைபெற்று வருகிறது. பிரசாரத்துக்கு நாளை ஒருநாள் மட்டுமே உள்ளதால், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றும், நாளையும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கும் என்பதால், வருமான வரித்துறை உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர்.

.

மூலக்கதை