விழுப்புரத்தில் கடும் எதிர்ப்பு வாக்கு சேகரிக்க முடியாமல் அமைச்சர், பாமக வேட்பாளர் ‘வுடு ஜூட்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
விழுப்புரத்தில் கடும் எதிர்ப்பு வாக்கு சேகரிக்க முடியாமல் அமைச்சர், பாமக வேட்பாளர் ‘வுடு ஜூட்’

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் பிரசாரம் செய்த அமைச்சர் சண்முகம், பாமக வேட்பாளருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பிரசாரத்தை பாதியில் முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் நேற்று விழுப்புரம் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது விழுப்புரம் ஜிஆர்பி தெரு பகுதியில் அமைச்சர் சண்முகம் தலைமையில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக சென்றார்.

இதனை முன்கூட்டியே அறிந்த அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் எங்கள் பகுதியில் பாமக கொடியுடன் யாரும் வரக்கூடாது என வலியுறுத்தி, வேட்பாளரின் பிரசார வாகனம் உள்ளே வராத வகையில் பாகர்ஷா சாலையில் வண்டிகளை போட்டு மறியலில் ஈடுபட முயன்றனர்.

 தகவல் அறிந்த விழுப்புரம் டிஎஸ்பி திருமால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே அமைச்சர், வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் பிரசார வாகனத்தில் ஓட்டு கேட்டு வந்தனர். போராட்டக்காரர்களும் சாலையில் நின்றுகொண்டு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரு சக்கர வாகனங்களில் இருந்த பாமக கொடியை பிடுங்கி எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு, பதற்றமும் ஏற்பட்டது.

பின்னர் போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டனர்.

அப்போது பெண்கள் சரமாரியாக திட்டிக்கொண்டிருந்த நிலையில், அமைச்சரும், பாமக வேட்பாளரும் பாதியிலேயே பிரசாரத்தை முடித்துவிட்டு சென்றனர்.

.

மூலக்கதை