வேப்பூரில் கலெக்டர் வருகைக்காக கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றம்!

தினமலர்  தினமலர்
வேப்பூரில் கலெக்டர் வருகைக்காக கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றம்!

வேப்பூர்:வேப்பூரில் கலெக்டர் வருகையை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அவர் சென்றதும் மீண்டும் ஆக்கிரமிப்பு நடந்தது.கடலுார் - சேலம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இப்பகுதியிலிருந்து பல மாவட்டங்களுக்கு போக்குவரத்து சிரமமின்றி எளிதில் செல்ல முடிவதால், தினசரி ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சேலம் மார்க்க சாலையையொட்டி, ஏழு லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்கூடம் அமைக்கப்பட்டது.பயணியர் நிழற்கூடம் முன் தள்ளு வண்டி வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், பயணிகள் வெயில் மற்றும் மழைக் காலங்களில் அவதியடைகின்றனர்.
இந்நிலையில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கலெக்டர் அன்புச்செல்வன் நேற்று முன்தினம் வேப்பூர் வந்தார்.இதனால் பயணியர் நிழற்கூடம் முன் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றப்பட்டு, அதனையொட்டி மேடைகள் அமைத்து நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 8:00 மணியளவில் கலெக்டர் புறப்பட்டதும், மீண்டும் அதே இடத்தில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை