வேட்பு மனு படிவம் வாங்கிச் சென்று... வீணடிப்பு! தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அலப்பரை

தினமலர்  தினமலர்
வேட்பு மனு படிவம் வாங்கிச் சென்று... வீணடிப்பு! தி.மு.க.,  அ.தி.மு.க.,வினர் அலப்பரை

கட்சி தலைவர்கள் போட்டியிட, அவர்கள் பெயரில் விருப்ப மனு கொடுப்பது போல், வேட்பாளர்கள் கவனத்தை, தங்கள் பக்கம் திருப்ப, வேட்புமனு படிவத்தை வாங்கிக் கொடுத்து, அலப்பரை காட்டும் கட்சி தொண்டர்களால், தேர்தல் செலவுக்கு, அரசு ஒதுக்கிய பணம் வீணடிக்கப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 26 மற்றும் 2ஏ படிவம் வாங்கி, அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை நிரப்பி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும்.இந்த படிவம், ஒவ்வொரு தொகுதியில் உள்ள, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், இலவசமாக வழங்கப்படுகிறது. 26 படிவம், 16 பக்கங்களை கொண்டது. அதேபோல், 2ஏ படிவம், 8 பக்கங்களை கொண்டது. தமிழ், ஆங்கிலம் என, இரு வகை படிவங்கள் வழங்கப்படுகின்றன.

தென் சென்னை தொகுதி அலுவலகத்தில், இரண்டு நாட்களில், 55 படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது. இதில், தேர்தலில் போட்டியிட வாங்கியவர்களின் எண்ணிக்கை, 20க்கும் குறைவாக இருக்கும். மீத முள்ள படிவங்களை, தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.பொதுவாக, அரசியல் கட்சி தலைவர்களை, 'காக்கா' பிடிக்க வேண்டி, மாவட்ட செயலர்கள் முதல், தொண்டர்கள் வரை, தங்கள் கட்சி தலைவர்கள் போட்டியிட வேண்டி, கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்வர்.

'பெண்டிங்':
மறைந்த கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் முதல், தற்போதுள்ள, தலைவர்கள், வாரிசுகள் வரை, அவர்கள் பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்வது தொடர்கிறது.அதுபோல், கட்சி வேட்பாளர்களுக்கு, வேட்புமனு படிவம் வாங்கிக் கொடுத்து, அவர்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப, கட்சி தொண்டர்கள் முயன்று வருகின்றனர்.

தென்சென்னை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர், ஜெயவர்த்தன் மற்றும் தம்பிதுரை, கே.பி.முனுசாமி உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு என, அக்கட்சியைச் சேர்ந்த, 12 பேர் வேட்புமனு படிவம் வாங்கிச் சென்றுள்ளனர்.அதேபோல், தென்சென்னை தொகுதி தி.மு.க., வேட்பாளர், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி, தயாநிதி மாறன், தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் உள்ளிட்டோருக்கு என, 8 பேர், வேட்புமனு படிவம் வாங்கிச் சென்றுள்ளனர்.

வேட்பாளர்களின் கவனத்தை, தங்கள் பக்கம் திருப்பவும், ஏதாவது, 'பெண்டிங்' வேலை இருந்தால், அதை சரி கட்டவும், கட்சி பதவிக்கும், தேர்தல் நேர பொறுப்பாளராக நியமிக்க, பணம் பட்டுவாடா பொறுப்பு வாங்க உள்ளிட்ட தேவைகளுக்கு, வேட்புமனு வாங்கிக் கொடுத்து, அலப்பறை செய்து வருகின்றனர்.

தடுக்கப்படும்:
ஜாதி, மதம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சிலரும், 'நானும் போட்டி போடுகிறேன்' என, நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் பெருமை பீற்றிக் கொள்ள, வேட்புமனு வாங்கிச் சென்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம் என, ஒரு, 'செட்' படிவம் தயார் செய்ய, குறைந்தது, 30 ரூபாய்க்கு மேல் செலவாகும். அலப்பறை காட்ட, வாங்கிச் சென்ற படிவங்கள் அனைத்தும், குப்பை தொட்டிக்கு தான் செல்லும்.

வேட்புமனு தாக்கல் இறுதி நாள் வரை, வேட்புமனு படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு தொகுதியில், 100க்கும் குறையாமல், படிவங்கள் வீணடிக்கப்படும். 40 தொகுதியிலும் சேர்த்து, 4,000க்கும் மேற்பட்ட படிவங்கள், வீணடிக்கப்பட வாய்ப்புள்ளது. படிவத்திற்கு, குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிப்பது அல்லது டிபாசிட் கட்டணத்தில், குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு கூறி, படிவம் வழங்குவது போன்ற நடவடிக்கை எடுத்தால் தான், படிவம் வீணடிப்பு தடுக்கப்படும்.

இயற்கை வளங்களை பாதுகாக்க, பேப்பர் பயன்பாட்டை குறைக்க, பணபரிவர்த்தனை, ரயில் டிக்கெட் உள்ளிட்ட சேவை துறைகளில், அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.பேப்பர் வீணடிப்பதை தடுக்க, வேட்புமனு படிவம் வழங்குவதிலும், கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- -நமது நிருபர்- -

மூலக்கதை