‘மக்கள் நலப்பணிகளில் கமிஷன் வாங்கியதில்லை’: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘மக்கள் நலப்பணிகளில் கமிஷன் வாங்கியதில்லை’: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்: மக்கள் நலப்பணிகளில் எப்போதும் கமிஷன் வாங்கியதில்லை என்று திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவை அறிமுகம் செய்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:அதிமுக அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஊழல் இல்லாமல் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

நான் எம். பி. ,யாக இருந்த போது, திண்டுக்கல்-சிலுவத்தூர் ரோட்டில் பாலகிருஷ்ணாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். தற்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து, மேம்பாலத்தை கட்டி வருகின்றன.

நில உரிமையாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் மேம்பாலப் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் நான் கமிஷன் எதிர்பார்ப்பதால்தான் பாலம் வேலை தாமதம் என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் நலப்பணிகளில் எப்போதும் நான் கமிஷன் வாங்கியதில்லை. பொய்யான குற்றச்சாட்டுக்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.

நான் உங்கள் வீட்டு பிள்ளை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மக்கள் நலப்பணிகளில் கமிஷன் வாங்கியதில்லை என்ற அமைச்சரின் பேச்சுக்கு என்ன அர்த்தம் என்று கட்சியினரும், பொதுமக்களும் குழப்பமடைந்தனர்.

‘‘மற்ற பணிகளுக்கு கமிஷன் வாங்குகிறேன் என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல உள்ளது அவரின் இந்த பேச்சு’’ என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



.

மூலக்கதை