அடையாறு மண்டல அலுவலகத்தில் லிப்ட் பழுதால் 2 பேர் மயக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடையாறு மண்டல அலுவலகத்தில் லிப்ட் பழுதால் 2 பேர் மயக்கம்

வேளச்சேரி: அடையாறு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் லிப்ட் பழுதானதால், அதில் இருந்த 2 பேர் மயங்கி விழுந்தனர். சென்னை மாநகராட்சியின் 13-வது மண்டல அலுவலகம் அடையாறு மேம்பாலம் அருகே 2 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தில் லிப்ட் வசதியும் உள்ளது. இங்குதான் தற்போது தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் தேர்தல் அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்நிலையில், இங்கு அலுவலக உதவியாளர்கள் முருகன், சரண்யா ஆகிய இருவரும் நேற்று மாலை தரை தளத்தில் இருந்து லிப்ட் மூலம் 2-வது தளத்துக்கு சென்றனர்.

அவர்கள் 2-வது தளத்தில் இறங்க முயற்சித்தபோது, அந்த லிப்ட்டின் கதவு பழுதானதால் திறக்க முடியவில்லை.

  இதனால் இருவரும் அலறி சத்தம் போட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு சக ஊழியர்கள் லிப்ட் சாவி மூலம் கதவை திறந்தனர்.

அதற்குள் லிப்ட்டில் இருந்த முருகன், சரண்யா ஆகிய இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை சக ஊழியர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இச்சம்பவத்தினால் அடையாறு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


.

மூலக்கதை