வாக்காளர்களுக்கு ஒருமாத மளிகை பொருட்கள்? தேனி தொகுதியில் ஓபிஎஸ் புது டெக்னிக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாக்காளர்களுக்கு ஒருமாத மளிகை பொருட்கள்? தேனி தொகுதியில் ஓபிஎஸ் புது டெக்னிக்

தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒருமாத மளிகை பொருட்களை பலசரக்கு கடைகள் மூலம் வழங்கி, வாக்குகளை அள்ள ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பால் வியாபாரிகள் மூலமும் அதிகாலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க அதிமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் உள்ள நிலையில் ஓபிஎஸ்சின் வாரிசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று எடப்பாடியின் ஆதரவாளர்கள் குமுறி வருகின்றனர்.

இதனால் அவர்கள் ‘உள்ளடி’ வேலையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ஓபிஎஸ் தரப்பினர் வாக்குகளை சேகரிக்க புது யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, தேனி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் முதல் கட்டமாக பங்குனி திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடக்கும் கோயில்களை கணக்கெடுத்து வருகின்றனர்.

அந்த கோயில்களில் விழாக்களை தங்களது செலவில் நடத்தி தருவதாக விழா கமிட்டியினரிடம் வாக்குறுதியளித்து வருகின்றனர். மேலும், வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் அதிக எண்ணிக்கையில்  வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் பலசரக்கு கடைகளின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

விரைவில் இந்த விபரங்கள் அடங்கிய பட்டியல் கைக்கு வந்ததும் பலசரக்கு கடைகள் மூலம் வாக்காளர்களுக்கு ஒருமாத தேவைக்கான மளிகை சாமான்களை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர சைக்கிள் மற்றும் டூவீலர்களில் வீடுகளுக்கு சென்று பால் வியாபாரம் செய்பவர்கள் குறித்த விபரங்களையும் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர். பால் வியாபாரிகள் மூலம் வீடுகளுக்கு அதிகாலையிலேயே சத்தமில்லாமல் பணம் வழங்க உள்ளனர் என்றும் கூடவே ஒரு மாத தேவைக்கான பாலுக்கான தொகையை தந்து விடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஓபிஎஸ் தரப்பின் இந்த புது டெக்னிக்கை கண்டறிந்து, தடுக்க தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


.

மூலக்கதை