பாமக இல்லையென்றால் அதிமுக இல்லை: அமைச்சர் சண்முகம் ஐஸ்ஸ்ஸ்.. கட்சியினர் அதிருப்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாமக இல்லையென்றால் அதிமுக இல்லை: அமைச்சர் சண்முகம் ஐஸ்ஸ்ஸ்.. கட்சியினர் அதிருப்தி

விழுப்புரம்: எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகதான் தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியாக உள்ளதாக அக்கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள், அமைச்சர்களே மார்தட்டி பேசிவருகின்றனர். கடந்த வாரம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடந்த கூட்டத்தில், எங்களால்தான் மற்றகட்சிகளுக்கு வாழ்வு என்ற அடிப்படையில் சட்டத்துறை அமைச்சர் சி. வி சண்முகம் பேசினார்.

ஆனால் அதே அமைச்சர் நேற்று பேசும்போது, பாமகவால்தான் தமிழகத்தில் அதிமுக தோல்வியிலிருந்து மீண்டு எழுந்தது என்று பேசியிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் நேற்று பாமக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் விழுப்புரம் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன், கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதிஷ் ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிமுகம் செய்துவைத்து பேசினார்.

இந்தக்கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் பேசியதாவது: கடந்த 1996ல் ஜெயலலிதாவிற்கே சோதனை வந்தது.

அப்போதைய தேர்தலில் தோல்வியை கண்டார் ஜெயலலிதா. அப்போது சிலர் அதிமுகவின் எதிர்காலம் முடிந்துவிட்டது, கட்சி அழிந்துவிட்டது என்றெல்லாம் பேசினார்கள்.

தோல்வியில் துவண்டு கிடந்த அதிமுக 1998ம் ஆண்டு தேர்தலின்போது பாமகவோடு கூட்டணி வைத்தது. மாபெரும் வெற்றியை பெற்றோம்.

பாமக இல்லையென்றால் தமிழகத்தில் அதிமுக கிடையாது. அந்த தேர்தலைப்போலவே பலம் வாய்ந்த கூட்டணி இந்த தேர்தலில் இயற்கையாக அமைந்துள்ளது.

2011ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் விஜயகாந்தோடு கூட்டணி வைத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். தற்போதைய நாடாளுமன்றத்தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்.

எம்பி தேர்தல் முடிந்த சில வாரங்களில் உள்ளாட்சித்தேர்தல் வருகிறது. இதே கூட்டணிதான் உள்ளாட்சித்தேர்தலிலும் நீடிக்கும் என்றார்.
பாமக இல்லையென்றால் அதிமுக இல்லை என்று அமைச்சர் சிவி சண்முகம் பேசியது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கூட்டத்தில் சலசலப்பு
பாமகவின் மாவட்டத்தலைவர் விநாயகம், கோட்ட பொறுப்பாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட செயலாளர் சுகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை மேடைக்கு அழைக்கவில்லை.

கீழே இருக்கையும் போடவில்லை. இதனால் வெறுத்துப்போன அவர்கள் ராமதாஸ் பேசுவதற்கு முன்பே வெளியேறிவிட்டனர்.

அதே போல் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் ரகுநாதனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மேடையில் இருக்கை ஒதுக்கவில்லை.

பேசுவதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதனால் அதிருப்தியடைந்து அவரும் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

.

மூலக்கதை