தாவரவியல் பூங்காவில் பட்டாம்பூச்சி 'பறக்கும்!'

தினமலர்  தினமலர்
தாவரவியல் பூங்காவில் பட்டாம்பூச்சி பறக்கும்!

கோவை : கோவை மக்களின் பொழுதுபோக்கு ஏக்கத்தை தீர்க்க, வேளாண் பல்கலை தாவரவியல் பூங்காவில் 'பட்டாம்பூச்சி பூங்கா' தயாராகி வருகிறது. பல்வேறு புதிய அம்சங்கள் அடங்கிய இப்பூங்கா, ஆகஸ்டு மாதம் பயன்பாட்டுக்கு வரும் என, பல்கலை துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.வேளாண் பல்கலையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா, 1908ல், மாணவர்களின் ஆய்வுக்காக, சாதாரண பூங்காவாக துவங்கப்பட்டது. காலப்போக்கில் விரிவுபடுத்தப்பட்டு, 1965 முதல் தாவரவியல் பூங்காவாக செயல்படுகிறது.மொத்தம், 47.5 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இப்பூங்காவில், உள்நாடு மற்றும் வெளிநாட்டை தாயகமாக கொண்டுள்ள மரங்கள், தாவரங்கள், மலர்கள், அழகு செடிகள் என, 800க்கும் மேற்பட்ட ரகங்கள், இடம் பெற்றுள்ளன.

2005ம் ஆண்டு முதல், சர்வதேச அளவிலான மலர் கண்காட்சிகள், இங்கு நடத்தப்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில் பராமரிப்புக்கு போதிய நிதியின்மை, சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு இன்மை என பல்வேறு காரணங்களால், மலர் கண்காட்சி நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது. அத்துடன், உரிய பராமரிப்பும் இன்றி போனது. இந்நிலையில், பல்கலை மற்றும் பிற பொது, சமூக நிறுவனங்களின் பங்களிப்புடன், இப்பூங்காவில் தனியாக பட்டாம்பூச்சிகள் பூங்கா, பறவைகளை ஈர்க்கும் மரங்கள், குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் குமார் கூறியதாவது:45 ஏக்கர் பரப்பளவில், 1-0 ஏக்கர் ஆராய்ச்சிகளுக்கான இடமாகவும், 35 ஏக்கர் குழந்தைகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

பட்டாம்பூச்சிகள் பூங்கா, பிரத்யேகமாக ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்காக, ரூ.25 லட்சம் மதிப்பில், பல்வேறு இடங்களிலிருந்து மரங்கள் வாங்கப்பட்டுள்ளன.பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி கல்வி, ஆராய்ச்சி, அறிவு மேம்பாட்டுக்கும் பூங்கா பயன்படும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்கு, 2 முதல் 3 கோடி ரூபாய் வரை செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. பூங்காவின் பணிகளை ஜூலையில் முடித்து, ஆக., மாதத்தில் பயன்பாட்டுக்கு அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை