திருமண மண்டபம் கண்காணிப்பு

தினமலர்  தினமலர்
திருமண மண்டபம் கண்காணிப்பு

திருப்பூர் : திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்கள், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தின், முக்கிய அம்சங்கள்:திருமண மண்டபங்களில் தனி நபர்களால், திருமண நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் முடியும் வரை முன்பதிவு செய்யப்பட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தாசில்தார் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

மண்டபங்களில் அரசியல் கட்சியினரால் வாக்காளருக்கு விருந்தளித்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது. தெரியவந்தால் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட கட்சியினர் மீதும் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அன்னதானம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்து வதற்கும் அனுமதிக்க கூடாது. திருமண நிகழ்ச்சியில், கட்சித் தலைவர்கள், கட்சி சின்னங்கள், கட்சிக் கொடிகள் ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பேனர்கள், கொடி ஆகியவற்றை மண்டபத்தில் வைக்க அனுமதிக்க கூடாது. அச்சக உரிமையாளர்கள், அச்சிடும் துண்டு பிரசுரங்கள், போஸ்டர், விளம்பரம் மற்றும் இதர இனங்களில் அச்சகம் மற்றும் வெளியிடுவோரின் பெயர் மற்றும் முகவரியை தெளிவாக குறிப்பிட வேண்டும். அச்சிடப்படும் விவரங்களை, வேட்பாளர்களின் அனுமதி பெற்ற பின்னர் அவருடைய கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே அச்சிட வேண்டும். ஜாதி, மொழி, இன அடிப்படையில் விமர்சிக்கும் வாசகம் இருக்க கூடாது. தவிர, தனிநபர்களை இழிவுபடுத்தக் கூடிய அல்லது விமர்சனம் செய்யக்கூடிய பிரசுரங்களை அச்சிட கூடாது.

மூலக்கதை