எண்ணுார் முகத்துவாரம் அகலப்படுத்தும் பணியில்... சொதப்பல்! பல லட்சம் ரூபாய் வீணடித்ததாக குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
எண்ணுார் முகத்துவாரம் அகலப்படுத்தும் பணியில்... சொதப்பல்! பல லட்சம் ரூபாய் வீணடித்ததாக குற்றச்சாட்டு

- நமது நிருபர் -பருவகால முன்னெச்சரிக்கையாக, எண்ணுார் முகத்துவாரத்தை துார்வாரி அகலப்படுத்தும் பணிகள், அரைகுறையாக விட்டு செல்லப்பட்டதாக, மீனவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.திருவள்ளூர் தெற்கு பகுதியில் உள்ள புழல், பூண்டி, கொற்றலை உபரி கால்வாய்கள், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர் வழித்தடங்கள் வழியாக செல்லும் உபரிநீர், எண்ணுார் முகத்துவாரம் சென்று கடலில் கலக்கும்.'டிரஜ்ஜிங்'சென்னையை புரட்டிய, 2015 பெருமழை வெள்ளத்தின் போது, பூண்டி, கொற்றலை, புழல் போன்ற நீர் நிலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட, 90 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான வெள்ள நீர், முகத்துவாரம் வழியாக கடலில் கலந்தது.முகத்துவாரப் பகுதி, அளவுக்கு அதிகமான வெள்ள நீரை உள்வாங்க முடியாத நிலையில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பின்னோக்கி சென்ற நீர், கால்வாயை ஒட்டிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மூழ்கடித்தது. இதற்கு, முகத்துவாரம் அகலமின்மையும், துார்வாராததும் முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்பட்டது.எண்ணுார் அனல்மின் நிலையம் மூடப்படுவதற்கு முன், முகத்துவாரம், 'டிரஜ்ஜிங்' எனும், மணல் வாரி இயந்திரங்கள் கொண்டு, துார்வாரும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.மணல் வாரி இயந்திரங்களில், முகத்துவார மணல் திட்டு கத்தரிக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் வழியாக, பல அடி துாரத்தில் உள்ள, நெட்டுக்குப்பம் குடியிருப்புகள் பின்புறம் குவிக்கப்படும்.அந்த மணல் மேடுகள், குடியிருப்பு பகுதிகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள மீனவ மக்கள், மணலில் உள்ள கிளிஞ்சல்களை சேகரித்து, வருவாய் ஈட்டி பயனடைந்தனர்.அனல்மின் நிலையம், இரு ஆண்டுகளுக்கு முன் மூடிய நிலையில், டிரஜ்ஜிங் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது படிப்படியாக நிறுத்தப்பட்டது.இதன் விளைவாக, மணல் மேடுகள் அதிகஅளவில் எழும்பி, முகத்துவாரப் பகுதி குறுகியது, தற்போது, 100- - 150 அடி அகலமாக குறைந்துள்ள முகத்துவாரம் வழியே செல்லும் தண்ணீர், கடலில் கலக்கிறது.கடந்த அக்டோபரில், பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு, முகத்துவார மணல் திட்டின் ஒரு பகுதியை துளையிட்டு, ஓடை போன்ற அமைப்பு ஏற்படுத்தும் பணிகள் துவங்கின.சிறு ஓடைஎண்ணுார் துறைமுக நிதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணிக்கு, மாதம், 24 லட்சம் ரூபாய் செலவில், நான்கு மாதங்கள் பணிகள் நடக்கும் என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்திருந்தனர்.ஓடை போல் அமைத்தால், முகத்துவாரம் ஆங்கில எழுத்தான, 'யு' வடிவில் அமைந்துவிடும். புதிய மற்றும் பழைய முகத்துவாரம் வழியாக தண்ணீர் ஆர்ப்பரிக்கும் போது, நடுவில் உள்ள மணல்திட்டு அரித்து சென்றுவிடும்.இதை மையப்படுத்தியே இந்த பணி நடந்தது. ஜனவரி வரையிலான, நான்கு மாதங்கள், இந்த பணிகள் நடந்து முடிந்தன. இதன்படி, 20 - 25 அடி அகலத்தில், மணல் அகற்றி, சிறு ஓடை போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.மணல் மேடுஆனால், இந்த ஓடை போன்ற அமைப்பு, கடலுடன் இணைக்கப்படவில்லை. முகத்துவாரம் கடலுடன் இணையும் இடத்தில், 10 -- 15 அடி துாரத்திற்கு, மணல் மேடுகள் எழும்பியுள்ளதால், தண்ணீர் கடலில் கலப்பது தடுக்கப்பட்டது.அந்த வழிப்பாதை ஆழமாக இல்லாததால், 10 - 15 அடி வரையிலான மணல் மேடுகளை அகற்றினாலும், தண்ணீர் செல்லாது.அலை வாட்டத்திற்கு ஏற்றாற்போல், மீண்டும் உருவான மணல் மேடுகளால், புதிதாக ஏற்படுத்தப்பட்ட வழிப்பாதை முற்றிலும் அடையும் நிலை உள்ளது.இதுவரை, டிரஜ்ஜிங் இயந்திரங்களால் துார்வாரி வந்த நிலையில், பொக்லைன் இயந்திரங்களால் முகத்துவாரத்தை துார்வாரும் பணி, தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், பல லட்சம் ரூபாய் வீணாடிக்கப்பட்டுள்ளதாக, மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எண்ணுார் முகத்துவாரம், டிரஜ்ஜிங் இயந்திரங்களால் துார்வாரப்பட்ட நிலையில், அனல்மின் நிலைய மூடலுக்கு பின், துார்வாரும் பணி நிறுத்தப்பட்டது. இந்த இயந்திரத்தால் பணி மேற்கொண்டிருந்தால், ஒரு மாதத்தில் பணி முடிந்திருக்கும். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொக்லைன் இயந்திரங்களால், முகத்துவார மணல் மேட்டின் ஒரு பகுதியை, துளையிட்டு பாதை ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இந்த பணியையும், அரைகுறையாக விட்டுச் சென்றுள்ளனர். இதனால், பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டது.கே.பார்த்தசாரதி, 37; மீனவர், தாழங்குப்பம், எண்ணுார்

மூலக்கதை