சிதம்பரத்தில் தி.மு.க., காங்., தொண்டர்கள். அப்செட்!..மீண்டும் வி.சி., கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு

தினமலர்  தினமலர்
சிதம்பரத்தில் தி.மு.க., காங்., தொண்டர்கள். அப்செட்!..மீண்டும் வி.சி., கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு

சிதம்பரம்:சிதம்பரம் லோக்சபா தொகுதி மீண்டும் வி.சி.,கட்சிக்கு ஒதுக்கியதால், நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த தி.மு.க மற்றும் காங்., கட்சி நிர்வாகிகள் கடுமையாக அதிருப்தி அடைந்தனர்.தமிழகத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளில் பரபரப்புக்கு பஞ்சமில்லாதது சிதம்பரம் (தனி) தொகுதி. இங்கு,கடந்த 1957ம் ஆண்டு முதல் நடந்த லோக்சபா தேர்தல்களில், சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரஸ் 6 முறை, தி.மு.க., 4 முறை, பா.ம.க., 3 முறையும், அ.தி.மு.க., 2 மற்றும் வி.சி.,கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
1957ம் ஆண்டு நடந்த தேர்தலில், காங்., கட்சியின் கனகசபை பிள்ளை, அதே ஆண்டில் நடந்த தேர்தலில் இளையபெருமாள், 1962 தேர்தலில் கனகசபை பிள்ளை வெற்றி பெற்றனர். 1984 முதல் 1991 வரையில் நடந்த மூன்று தேர்தல்களில் வள்ளல்பெருமான் வெற்றி பெற்று சிதம்பரம் தொகுதியை கையில் வைத்திருந்தார்.1967 மற்றும் 1971 தேர்தலில் தி.மு.க., மாயவன் எம்;பி.,யாக இருந்தார். அடுத்து 1980ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., குழந்தைவேலுவும், 1996ல் தி.மு.க., சார்பில் கணேசனும் போட்டியிட்டு எம்.பி., யாக வெற்றி பெற்றனர். 1998 தேர்தலில் பா.ம..க, தொகுதியை கைப்பற்றி, 2004 வரையில் மூன்று முறை பா.ம.க., வெற்றியை தக்க வைத்திருந்தது. தலித் எழில்மலை ஒரு முறையும், பொன்னுசாமி இருமுறையும் எம்.பி.,யாக இருந்தனர். 1977 தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டி இட்ட முருகேசனும், 2014 தேர்தலில் அ.தி.மு.க., சந்திரகாசியும் வெற்றி பெற்றனர்.நான்கு முறை தொடர்ந்து போட்டியிட்ட வி.சி., கட்சி, 2009 தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளன் எம்.பி.,யாக இருந்தார்.
சிதம்பரத்தில் மூன்று முறை வெற்றி பெற்று தொகுதியை கோட்டையாக வைத்திருந்த பா.ம.க., இந்த தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விரும்பாமல் பின்வாங்கியது. கூட்டணியில் அ.தி.மு.க., வேட்பாளரே களமிறங்க உள்ளார். எதிரணியில் தி.மு.க. கூட்டணியில் ஆரம்பத்தில் வி.சி.,கட்சியும் போட்டியில் இருந்து பின்வாங்கிய நிலையில், தி.மு.க., வும், காங்.,கட்சியும் தங்களது வேட்பாளரை களமிறக்க ஆயத்த பணிகளில் இறங்கின. 22 ஆண்டுகளுக்கு பிறகு, போட்டியிட வாய்ப்பு கிடைக்கப்போகிறது என, கறி விருந்து வைத்து, தி.மு.க., வினர் உற்சாகத்தில் மிதந்தனர்.
வேட்பாளரை கூட தேர்வு செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர்.அதேபோன்று, 6 முறை தொகுதியை வைத்திருந்த காங்., கட்சியும் தொகுதியை ஒதுக்கும்படி கூட்டணியில் கடைசி வரை கடுமையாக போராடியது. அத்துடன் தேர்தல் பணியையும் கூட துவக்கினர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தொகுதி நமக்கு கிடைக்கப்போகிறது என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் தி.மு.க., மற்றும் காங்.,கட்சியினர் இருந்தனர்.இதனிடையே நேற்று திடீரென மீண்டும் வி.சி.,கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால், தி.மு.க., காங்., கட்சியினர் கடுமையாக அதிருப்தியில் உள்ளனர்.இதனால், வி.சி., கட்சி வேட்பாளருக்கு, கூட்டணி கட்சியினரை சரி செய்யவே போராடும் நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மூலக்கதை