தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்- தேசியக் கருத்தரங்கம் 20-ந் தேதி சென்னையில் நடக்கிறது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும், பங்களிப்பும் என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் சென்னையில் வரும் 20-ந் தேதி நடக்கிறது.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழிசைக் கல்லூரி,  இராஜா அண்ணாமலை மன்றம், கானல்வரி கலை இலக்கியக் கழகம் ஆகியவை இணைந்து, "தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்"  என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை), சென்னை, பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றம், தமிழிசைச் சங்கத்தில் நடக்கிறது.

கருத்தரங்கத்திற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமத்தின் தமிழாராய்ச்சித் துறை இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன் தலைமை தாங்குகிறார். கருத்தரங்கத்தை முன்னிட்டு கட்டுரைகள் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி எனும் கூற்றுக்கிணங்க உலக இசைகளுக்கெல்லாம் தாய் இசையாகத் திகழ்வது தமிழிசையே! பண்டைய தமிழர்கள் உலகம் முழுவதும் தமது ஆளுமையினைப் பல்வேறு துறைகளில் செலுத்தி உள்ளனர். அதில் இசைத்துறையும் ஒன்று.

இருந்தபோதிலும் தமிழிசை, தமிழ் மொழி போன்றே பல்வேறு காலக்கட்டங்களில் அந்நிய மொழிகளின் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த நிலை இன்னமும் நீடித்து வருகின்றது.

அந்த நிலையில் இருந்து தமிழிசையினை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் மியான்மார், லாவோத்சு, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்சு, ஹாங்காங், கிழக்குத் திமோர், ஜப்பான், கொரியா போன்ற தென்கிழக்கு மற்றும் தூரக்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசையின் பரவல் மற்றும் பங்களிப்பு குறித்து ஆய்ந்து அறிந்து வெளிக்கொண்டு வருவது இன்றைய தேவையாக இருக்கின்றது. ஆகையால் அறிஞர் பெருமக்கள் மேற்கண்ட பொருண்மை குறித்து கட்டுரை வழங்கலாம்.

மார்ச் 12-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தெரிவு செய்யப்படும் கட்டுரையாளர்களுக்குப் பயணப்படி மற்றும் மதிப்பூதியம் விதிப்படி வழங்கப்படும். கட்டுரைகள் யூனிக்கோடு எழுத்துருவில் அமைய வேண்டும். கட்டுரைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கட்டுரைகள் நூலாகவும், மின்னிதழிலும் வெளியிடப்படும். சிறந்த கட்டுரைகளுக்கு ஆப்பிரகாம் பண்டிதர் விருது வழங்கப்படும்.

மேற்கண்ட கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக, கானல்வரி கலை இலக்கிய இயக்கத்தின் செயலர் முனைவர் இரத்தின புகழேந்தி, தமிழிசைக் கல்லூரி முதல்வர் முனைவர் மீனாட்சி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புல உதவிப்பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் ஆகியோர் உள்ளனர்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை