பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி!

பாம்பன் ரயில் பாலத்தில் 85 நாட்களுக்குப்பின், மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் அமைக்கப்பட்ட மண்டபம் - பாம்பன் ரயில் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல நடுவில் திறந்து வழிவிடும் வகையில் ஷெர்ஜர் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. 

பாலத்தில் உள்ள ஒரு இரும்பு பீமில் விரிசல் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு டிச. 4ம் தேதி முதல் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது. 
வெளியூர் பயணிகள் அனைவரும் மண்டபத்தில் இறங்கி ராமேஸ்வரம் வந்து சென்றதால் மிகவும் அவதி அடைந்தனர்.

இதனிடையே பழுதான தூக்குப்பாலம் சீரமைக்கப்பட்டு பயணிகள் இல்லாமல் இருமுறை ரயில்கள் இயக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. 

சென்னையில் நடந்த ரயில்வே உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தின் முடிவில், பாலத்தில் மீண்டும் ரயில்கள் இயக்குவதற்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து  பாம்பன் பாலத்தின் வழியாக அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தன. ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் தூக்குப்பாலத்தின் வழியாக சென்றன.

வாரணாசியில் இருந்து புறப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில், சிக்னல் கிடைத்ததை தொடர்ந்து பாம்பன் பாலம் வழியாக 10 கிமீ வேகத்தில் பயணித்து,  ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தது. 

தொடர்ந்து சென்னையில் இருந்து புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில், கன்னியாகுமரியில் இருந்து வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், திருப்பதியிலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை - ராமேஸ்வரம் பாசஞ்சர், திருச்சி - ராமேஸ்வரம் பாசஞ்சர் என அனைத்து ரயில்களும் ஒவ்வொன்றாக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தன. 

இதுபோல் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் புறப்பட்டு சென்றன. 85 நாட்களுக்குப்பின் மீண்டும் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை துவங்கியதால், ராமேஸ்வரம் ரயில் நிலையம் பயணிகளின் வருகையால் பரபரப்பாக காணப்பட்டது. பயணிகளும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டனர்.

மூலக்கதை