சர்வதேச தாய்மொழி தினமான பிப்ரவரி 21 அன்று எனது வாணி தமிழ் எழுத்துப் பிழை திருத்தியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சர்வதேச தாய்மொழி தினமான பிப்ரவரி 21 அன்று எனது வாணி தமிழ் எழுத்துப் பிழை திருத்தியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது

ஆங்கிலத்திற்குப் பல பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைக்கும் போது தமிழுக்கும் இணையத்தில் பிழைதிருத்தி வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வாணி திருத்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை அம்சங்களுடன் வெளிவந்தது. இச்செயலி 2015 ஆம் ஆண்டிற்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் கணிமை விருதையும் பெற்றது. தொடர்ச்சியான ஆய்வு மற்றும் மேம்பாடுகளுடன் புதுப் பொலிவுடன் அதிகத் தரவுகளுடன், அதிக ஆற்றலுடன் வாணியின் மேம்பட்ட பதிப்பு சர்வதேச தாய்மொழி தினமான இன்று(பிப்21) பாடலாசிரியர் மதன் கார்க்கியால் சமூகத்தளத்தில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து இதை உருவாக்கிய நீச்சல்காரன் ராஜாவிடம் பேசியபோது அவர் கீழ்காணும் தளங்களில் இதுகுறித்த தகவல்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

http://vaani.neechalkaran.com

https://twitter.com/madhankarky/status/1098528750793150466

https://www.facebook.com/Madhankarky/posts/2558939397481124

மேலும் இந்த வெளியீட்டில் என்னன்னே மேம்பாடுகள் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்டதற்கு.

இதுவரை தவறான சொல்லுக்குப் பரிந்துரையைக் காட்டுபோது, மொத்தமாகத் தேர்வுசெய்த பிறகே அதை மாற்றமுடிந்தது. இனி அதற்கு மாறாக நேரடியாகவே ஆவணத்தில் திருத்திக் கொள்ளமுடியும். அதாவது WYSIWYG இடைமுகமாக மேம்பட்டுள்ளது. கையடக்கக் கருவிகளுக்கு ஏற்ப ஒத்திசைவும் கொண்டுள்ளது. எனவே இனி எளிதில் கைப்பேசி வழியாகப் பயன்படுத்த முடியும். விண்டோஸ், லினைக்ஸ் போன்ற இயங்குதளங்களில் நவீன உலாவிகளில் சிறப்பாகச் செயல்படும்.(ஆப்பிள் கருவிகளின் ஒத்திசைவு விரைவில் சேர்க்கப்படும்) முன்னதைவிடக் கூடுதலாக ஐயாயிரம் புதிய அடிச்சொல்லுடன் மொத்தம் 45000 அடிச் சொற்களுடன் சுமார் ஒன்பது கோடி தமிழ்ச்சொற்களைப் பகுத்துணரும். புழக்கத்தில் உள்ள ஆயிரம் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைப் பரிந்துரையாக வழங்கும். அதாவது"போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றேன்" என்றால் அதற்குக் "காவல்நிலையத்திற்குச் சென்றேன்" என்று காட்டும். பிசினஸுக்கு சவாலாய் என்றால் "தொழிலுக்குச் சவாலாய்" எனப் பரிந்துரைக்கும். இதனால் ஆங்கிலக் களப்பின்றி, தமிழை எழுத முடியும். புள்ளியியல் அடிப்படையில் இயங்கும் நாவியின்[http://dev.neechalkaran.com/naavi] பல அம்சங்களை வாணியில் இலக்கண விதி அடிப்படையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் 70% சந்திப்பிழைகளையும் கண்டுணர்ந்து திருத்தும். "ஒரேப் பொருளா" என்று கொடுத்தால் தேவையற்ற சந்தியை நீக்கி "ஒரே பொருளா" எனப் பரிந்துரைக்கும். புழக்கத்திலுள்ள தனிப் பெயர்ச்சொல்(ஊர்ப் பெயர், ஆண், பெண் மக்கள் பெயர்கள்) பலவற்றைக்கூட இது புரிந்துகொள்ளும். தமிழர் பரவலாக உள்ள பகுதிகளின் பெயர்கள் பெரும்பாலும் சேர்க்கப்பட்டுள்ளன.  வழமை போல ஒரு எழுத்துப் பிழையைத் திருத்தத் தேவைப்படும் (தட்டுப்பிழை(typo), சந்திப்பிழை, ஒருங்குறிப் பிழை, பேச்சுவழக்கு) அனைத்துச் சோதனைகளையும் செய்து பரிந்துரைக்கும். தற்காலத் தமிழ் நடையை மட்டுமே புரிந்து கொள்ளும். பள்கழைகலக என்று தவறாக இருந்தாலும் "பல்கலைக்கழக" எனப் பரிந்துரைக்கும். வேற்றுமை உருபுடன் இயங்கும் ஒரு தொகுப்பு அகராதியையும் கொண்டுள்ளது. இதில் ஒரு சொல்லின் பல வடிவங்களையும் (inflect form) இது உணர்ந்து கொண்டு அதன் பொருளை முக்கிய சில அகராதிகளிலிருந்து எடுத்துக் காட்டும். தற்காலத் தமிழகத்தில் புழக்கமில்லாத அதிகம் புழங்கும் இலங்கைத் தமிழ்ச்சொற்களும் இதில் கணிசமாக உள்ளன. அமெரிக்க, பிரிட்டிஷ் ஆங்கிலம் போல இந்திய இலங்கைத் தமிழ் வழக்குகளுக்கு எதிர்காலத்தில் தனிப்பிரிவுகள் உருவாகக்கூடும் ஏபிஐ வசதியுடன் இருப்பதால் விரும்பும் தளங்களில் இதன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். இணையத்தில் உள்ள அனைத்துக் கருவிகளுக்கும் அனைத்து சொல்லாளர்களுக்கும் இதன் மூலம் பிழை திருத்த இயலும்.

மேலும் குறிப்பிடுகையில் இது குறித்து ஆலோசனைகளும், குறைகளையும் சுட்டிக்காட்டலாம் என்றும் தெரிவித்தார்..

இவருடன் கைகோர்த்து இந்த அரிய பணியை உலக மக்களுக்கு கொண்டுசேர்க்கும் முயற்சியில் வலைத்தமிழ் பெருமிதம்கொள்கிறது..

 

மூலக்கதை