விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க 23, 24 தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வருவதையொட்டி விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேர். பெண்கள் 2 கோடியே 98 ஆயிரத்து 60 ஆயிரத்து 765 பேர். இதர பிரிவினர் 5472 பேர் அடங்குவர். மேலும் வாக்காளர் பட்டியலில் வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 97 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்தவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க வசதியாக தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24 ம் தேதிகளில் சிறப்பு முகாம்  நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 

இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வழங்கப்படும் கடைசி வாய்ப்பு ஆகும். விடுபட்ட வாக்காளர்கள் இதை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை