வீட்டுமனை பட்டா கொடுப்பதாக... வதந்தியால் அவதி!கலெக்டர் ஆபீசுக்கு படையெடுத்த மக்கள்

தினமலர்  தினமலர்
வீட்டுமனை பட்டா கொடுப்பதாக... வதந்தியால் அவதி!கலெக்டர் ஆபீசுக்கு படையெடுத்த மக்கள்

திருப்பூர்:-கலெக்டர் அலுவலகத்தில், வீட்டுமனை பட்டா கொடுப்பதாக வதந்தி பரப்பப்பட்டதால், அப்பாவி ஏழை மக்கள், பட்டா கேட்டு மனு கொடுக்க வந்திருந்தனர்.திருப்பூர் சுற்றுப்பகுதி மக்கள், வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க, வேலைக்கு கூட செல்லாமல், வந்து விடுகின்றனர். பாமர மக்களை ஏமாற்றி, சில அரசியல் கட்சிகள் ஆதாயம் அடைந்து வருகின்றன.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, இவ்வாறு, மனு கொடுக்க கூட்டத்தை கிளப்பி விடுவது சிலரது வழக்கமான பணியாக மாறிவிட்டது.கடந்த சட்டசபை தேர்தலின் போது, இதேபோல், மக்கள் அணிவகுத்தனர். நேற்றைய, குறைகேட்பு கூட்டத்திலும், 200க்கும் மேற்பட்டோர், வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்திருந்தனர்.மங்கலம் நால்ரோடு, காங்கயம் கிராஸ் ரோடு காயிதே மில்லத் நகர், பல்லடம் அறிவொளி நகர் என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்தனர்.பெண்கள் கூறுகையில்,'லோக்சபா தேர்தல் வர இருப்பதால், கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கொடுப்பதாக, சிலர் கூறினர். நேரில் சென்று மனு கொடுத்தால், வீட்டுமனை கிடைக்குமென, ஆசை வார்த்தை கூறினர்.
அதனை நம்பி, நாங்களும் மனு கொடுக்கவந்திருக்கிறோம்' என்றனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:பட்டா கேட்டு வந்த மக்களிடம், அதிகாரிகளே, நேரடியாக மனுக்களை பெற்று கொண்டனர். மனு கொடுக்க வர வேண்டாமென, மக்களிடம் கூற முடியாது. இருப்பினும், வீண் வதந்தி பரப்புவோரை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த சட்டசபை தேர்தலின் போது, 26 ஆயிரம் பேர், வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தனர்.பட்டா வழங்கும் திட்டம் எதுவும் இல்லை; திட்டம் வந்தால், நிலம் எடுப்பு செய்துவிட்டு, தகவல் தெரிவிக்கப்படும்'என பதில் அனுப்பினோம். அதேபோல், தற்போதும் பதில் மட்டுமே அனுப்பப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

மூலக்கதை