கடம்பூர் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடம்பூர் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த கடம்பூர் கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் முதல், 2ம் கால, 3ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது.

நேற்று (10ம் தேதி) அதிகாலையில் 4ம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து காலை 9. 50 மணிக்கு வேத விற்பன்னர்கள் புனிதநீர் எடுத்து வந்து அனைத்து கோபுரங்களுக்கும் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள், கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ராமகிருஷ்ணாமட துறவி ஸ்ரீ சர்வ சதானந்த சுவாமிகள், முன்னாள் காவல் துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம்,

அம்மா பேரவை செயலாளர்  ஆனூர் பக்தவத்சலம், முன்னாள் எம்எல்ஏக்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், மூர்த்தி, காவல்துறை டிஐஜி தேன்மொழி, மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி,  டிஎஸ்பி. வளவன், ஜி. சம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து திருக்கழுக்குன்றம் சிவதாமோதரனின் சொற்பொழிவு நடந்தது.

இரவு 7 மணிக்கு கைலாசநாதர் திருக்கல்யாணம் நடந்தது.   நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட், மருத்துவ முகாம்,  108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் சோ. செந்தில்குமார் மற்றும் உபயதாரர்கள்  கே. பி. ராஜன் பிச்சுமணி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

.

மூலக்கதை