திருச்சியில் இன்று மாலை விசிக சார்பில் தேசம் காப்போம் மாநாடு : ஸ்டாலின், கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருச்சியில் இன்று மாலை விசிக சார்பில் தேசம் காப்போம் மாநாடு : ஸ்டாலின், கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

திருச்சி : விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் இன்று மாலை நடக்கிறது. இதில், ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சனாதன பயங்கரவாதத்துக்கு எதிராக தேசம் காப்போம் மாநாடு என்ற பெயரில் திருச்சி பொன்மலை ஜி. கார்னரில் இன்று (23ம் தேதி) மாலை 5 மணிக்கு மாநாடு நடக்கிறது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகிக்கிறார்.

பொது செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் முகமது யூசுப் வரவேற்கிறார்.



திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் கொடிக்குனில் சுரேஷ், மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி. ராஜா, பொது செயலாளர் சுதாகர் ரெட்டி, புதுவை முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திக தலைவர் கி. வீரமணி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். மாநாட்டையொட்டி பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடம் மற்றும் மாநகரில் முக்கிய  இடங்களில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசி மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதுமிருந்து விசி கட்சியின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

ஸ்டாலின் மற்றும் தேசிய கட்சி தலைவர்கள் வருவதை முன்னிட்டு திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை