கொடநாடு பிரச்னையில் சிபிஐ விசாரணை நடத்தினால் அதை சந்திக்க அதிமுக தயார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொடநாடு பிரச்னையில் சிபிஐ விசாரணை நடத்தினால் அதை சந்திக்க அதிமுக தயார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கொடநாடு பிரச்னையில் சிபிஐ விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சார்பில், மீன்கள் இணையதளம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

யார் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தில் மீன் கேட்டால், வீட்டுக்கே வந்து  மீன் வழங்கப்படும். தற்போது, மாநகராட்சி மூலம் பதப்படுத்திய மீன்களை விற்பனை செய்யவும், மீன்கள் டாட் காம் மூலம் மீன்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்களின் பெயர்களை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் காலம் எல்லோருக்கும் வந்துவிட்டது. யாகம் வளர்த்தால் ஒருவர் முதலமைச்சர் ஆகிவிட முடியாது.

ஒரு அலுவலகம் செப்பனிடப்பட்டு ஒரு ஊதுபத்தி அல்லது கற்பூரம் கொளுத்தி புகை வந்தால் உடனே யாகம் வளர்க்கப்பட்டது என்று கூற முடியுமா? எது செய்தாலும் உடனடியாக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே சீண்டு முடிக்கப்படுகிறது.

எப்படி சீண்டு முடித்தாலும் சரி, ஒற்றுமை உணர்வோடு கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டும் வரை அதிமுக வெற்றிநடை போட்டு வருகிறது.

யார் நினைத்தாலும் பிரிக்க முடியாத மாபெரும் இயக்கமாக உள்ளது. குறிப்பாக, ஜெயலலிதா மறைந்த பிறகு எவ்வளவோ சித்து விளையாட்டு விளையாடினார்கள்.

ஆனாலும் இதில் எதுவும் எடுபடவில்லை. கொடநாடு பிரச்னையில் தற்போது வெளியாகியுள்ள செய்திகள் அனைத்தும் ஒரு திட்டமிடப்பட்ட அரங்கேற்றப்பட்ட புனையப்பட்ட ஒரு சதி.

தேர்தல் வரும் நேரத்தில் இந்த ஆயுதத்தை இப்போது எடுத்துள்ளார்கள். இதுவும் மழுங்கிய ஆயுதமாக போய்விடும்.

இப்போதும் நீதிமன்றம் சென்று சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்கட்டும். நீதிமன்றம் சொன்னால் சிபிஐ விசாரணை நடத்தட்டும், நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம்.

அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

அரசியலில் எங்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாதவர்கள், முதுகில் குத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆயுததத்தை எடுத்திருக்கிறார்கள். அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை