ஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவு கன்னியாகுமரி வெறிச்சோடியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவு கன்னியாகுமரி வெறிச்சோடியது

கன்னியாகுமரி: சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனத்தை காணும் வசதி, மூன்று பெருங்கடல்களின் சங்கமம் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் உலகம் முழுவதும் உள்ள மக்களால் கன்னியாகுமரி மிகவும் விரும்பப்படுகிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.

சீசன் காலங்களில் இங்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளிக்கும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் சூரியன் உதயம், மறைவு போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.

கடலில் படகு மூலம் பயணம் செய்து விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை அடைவது என்பது சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத, புதுவித அனுபவத்தை அளித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 17ம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது.

அதுமுதல் கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. ேமலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது.

இத்துடன் மாலை வேளைகளில் உள்ளூர் மக்களும் வருகை புரிந்ததால் கன்னியாகுமரி களைகட்டி வந்தது. கன்னியாகுமரியில் எங்கு பார்க்கினும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளாகவே காட்சியளித்து வந்தனர்.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக டிக்கெட் கவுன்டரில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து டிக்கெட் வாங்கி சென்றனர். மேலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.

திருவேணி சங்கம கடற்கரை, காந்தி காமராஜர் மணி மண்டபங்கள், காட்சி கோபுரம், சன்-செட் பாயின்ட் பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தற்காலிக கடைகள் உட்பட அனைத்து கடைகளிலும் வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்திபெற்ற மகர விளக்கு பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது.

அன்று மாலை 6. 35 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது. மகர விளக்கு பூஜைகளுக்கு பிறகு நேற்று காலை கோயில் நடை அடைக்கப்பட்டது.

இத்துடன் இந்தாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு காலம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியிலும் நேற்றுடன் ஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவுபெற்றது.

இதனால் கன்னியாகுமரியில் இதுவரை வழக்கமாக நிலவிவந்த ஐயப்ப பக்தர்கள் சீசன் சூழல் இன்று மாறிவிட்டது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.

ஐயப்ப பக்தர்கள் வருகை அடியோடு நின்று விட்டது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே காணப்பட்டனர்.

இதனால் வியாபாரிகளும் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.

கிட்டத்தட்ட கடந்த 2 மாதங்களாக களைகட்டி வந்த கன்னியாகுமரி,  களையிழந்து காணப்படுகிறது.

.

மூலக்கதை