மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்

தினமலர்  தினமலர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளத்தில் அம்மனும், சுவாமியும் அலங்கார மிதவை சப்பரத்தில் இன்று (ஜன.,21) எழுந்தருளி காலை 10:05 மணிக்கு மேல் 10:29 மணிக்குள் இருமுறையும், இரவு 8:00 மணிக்கு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து மைய மண்டபம் அடைவர்.

இத்திருவிழா கொடியேற்றம் ஜன.,9 நடந்தது. தினமும் அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்கள், தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். முக்கிய நிகழ்வாக தெப்பத்திருவிழாவை முன்னிட்டு வைகையில் கிணறு அமைத்து மூன்று மாதங்களாக தெப்பத்திற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் வறண்ட தெப்பத்தில் அம்மன், சுவாமி எழுந்தருள விழா நடத்தப்பட்டது.

தற்போது தெப்பத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. மின் விளக்குகளால் தெப்பம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு அம்மனும், சுவாமியும் அதிகாலை 5:30 மணிக்கு எழுந்தருளி சித்திரை வீதிகள், அம்மன் சன்னதி, கீழ மாசி வீதி, யானைக்கல், நெல்பேட்டை, முனிச்சாலை, காமராஜர் சாலை, பாண்டியன் - மாலதி திருக்கண் மண்டகப்படியாகி தெப்பக்குளம் சுற்றி முக்தீஸ்வரர் கோயில் சேர்வர்.

பின் தெப்பத்தில் அலங்கார மிதவை சப்பரத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி காலை 10:05 மணிக்கு மேல் 10:29 மணிக்குள் இருமுறையும், இரவு 8:00 மணிக்கு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து மைய மண்டபம் அடைவர். விழா முடிந்து சுவாமி கோயில் சேர்த்தியாகும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும். தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மூலக்கதை