காத்திருப்பு! நெல் மூட்டைகளுடன் விவசாயிகள்...கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?

தினமலர்  தினமலர்
காத்திருப்பு! நெல் மூட்டைகளுடன் விவசாயிகள்...கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?

பெண்ணாடம்:பெண்ணாடம் பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து துவக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பெண்ணாடம் சுற்றியுள்ள மாளிகைக்கோட்டம், வடகரை, நந்திமங்கலம், செம்பேரி, சவுந்திரசோழபுரம், இறையூர், கொத்தட்டை உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3,000 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர்.கடந்த 3 வாரங்களாக அறுவடை பணி நடந்து வருகிறது. ஆண்டு தோறும் சம்பா அறுவடையின் போது முன்கூட்டியே அந்தந்த பகுதிகளில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம். இதுவரை திறக்கவில்லை.பெண்ணாடம் பகுதிகளில் அறுவடை பணிகள் துவங்கிய நிலையில், மாளிகைக்கோட்டத்தில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், நாளுக்கு நாள் நெல் மூட்டைகளின் வரத்து அதிகரித்துள்ளன. முன்பதிவிற்காக விவசாயிகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் நெல் மூட்டைகளை அடுக்கியும், கொட்டியும் வைத்து, காத்துக்கிடக்கின்றனர்.இதேபோன்று, கிளிமங்கலம் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்துள்ளனர். எனவே, பெண்ணாடம் பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து துவக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை