பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 10 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 10 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 இதுகுறித்து தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காததால், டிசம்பர் 4ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 30ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்தது. அரைநாள் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4ம் தேதி காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக இருந்தது.

இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.   பள்ளிகளில் அரையாண்டு தேர்வு போன்றவை இந்த போராட்டத்தால் பாதிக்கப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ஜாக்டோ - ஜியோ விவகாரம் தொடர்பாக இதுவரை தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை  தமிழக அரசின் வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து வேலைநிறுத்த போராட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்ற வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் கூறினர். இதனிடையே டிச. 10 ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் ஜன 7ம் தேதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த 7ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.



இதனால்,  வழக்கு விசாரணையில் வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ திரும்பப் பெற்றது. மேலும், திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும்  என்றும் ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ, அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கை ஜன. 28க்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது. இந்த நிலையில், கடந்த 18ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதை தொடர்ந்து இன்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பங்கேற்கும் அவசர கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் அரசிடம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துகின்றனர்.

இதை தொடர்ந்து நாளை மறுநாள் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்கிறது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு அலுவலக பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வதால் பள்ளிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது தான் விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்கள் வராவிட்டால் தற்காலிக பணியாளர்களை வைத்து பள்ளிகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே பணிக்கு வராத ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை