பாரம்பரியவிழா!'ஏழாங்காய்' விளையாடிய கலெக்டர்.. கயிறு இழுக்கும் போட்டியில் அமைச்சர்

தினமலர்  தினமலர்
பாரம்பரியவிழா!ஏழாங்காய் விளையாடிய கலெக்டர்.. கயிறு இழுக்கும் போட்டியில் அமைச்சர்

---நமது நிருபர்-மறைந்து வருகின்ற பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் புதுமை முயற்சியாக, பாரம்பரிய கலை விழா, காரைக்காலில் நடந்தது. இந்த விழாவுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.காணும் பொங்கலை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், பாரம்பரிய கலை விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, நெடுங்காட்டில் இருந்து, குரும்பகரம் வரை, சாலையோர கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், கிராமிய நடனம், காளியாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இவற்றை பார்ப்பதற்காக, சாலையின் இருபுறமும் உள்ளூர் மக்கள் குவிந்தனர். ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பார்த்து ரசித்தனர்.கிராமிய கலை விழாவை துவக்கி வைத்த அமைச்சர் கமலக்கண்ணன், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., கலெக்டர் கேசவன், சப் கலெக்டர் விக்ராந்த ராஜா ஆகியோருடன், மாட்டு வண்டியில் நெடுங்காடு கடை வீதி வழியாக குரும்பகரம் வரை பயணம் செய்தார். இரண்டு காளைகள் பூட்டப்பட்ட வண்டியை, அமைச்சர் கமலக்கண்ணன் கையில் சாட்டையுடன் உற்சாகமாக ஓட்டி சென்றார்.குரும்பகரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில், பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னோர்கள் பயன்படுத்திய விவசாய கலப்பை, பாரம்பரிய விதைகள், பழமையான பாதுகாப்பு கருவிகள், நாணயங்கள், விளையாட்டு பொருட்கள், ஒலி - ஒளிக் கருவிகள், பழங்கால அரிகேன் விளக்கு, ஓலைச்சுவடி, நெல்கோட்டை, விளக்குகள், பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், மற்றும் பழமையான வீட்டு உபயோகப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.இவற்றை பார்த்து உற்சாகம் அடைந்த கலெக்டர் கேசவன், ஏழாங்காய் விளையாட்டை அனைவருடன் விளையாடி மகிழ்ந்தார். கோலமிடுவது, பாரம்பரிய உணவு சமைப்பது, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும், உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளும் நடந்தது. கயிறு இழுக்கும் போட்டியில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மூலக்கதை