பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக்குறைவால் காலமானார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவால்  காலமானார்.

பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன், சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்ற தனது பெயரை பிரபஞ்சன் என மாற்றிக் கொண்டவர். புதுச்சேரியில் 1945-ம் ஆண்டு பிறந்த பிரபஞ்சன், பத்திரிகைகள் மூலம் தனது எழுத்துப்பணியை தொடங்கினார். கரந்தை கல்லூரியில் படித்து தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர். தஞ்சையில் தமிழாசிரியராக பணியை தொடங்கி எழுத்தையே வாழ்வாகக் கொண்டார்.

வானம் வசப்படும், மகாநதி உள்பட 9 நாவல்களை பிரபஞ்சன் எழுதி உள்ளார். ஏராளமான சிறு கதைகளும், நாடகங்களும் பிரபஞ்சன் எழுதியுள்ளார். வானம் வசப்படும் என்ற நாவலுக்காக 1995 -ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும், மானுடம் வெல்லும் என்ற நாவலுக்காக இலக்கிய சிந்தனை விருதும் பிரபஞ்சன் பெற்றுள்ளார். 

தமிழில் வெளிவரும் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் பிரபஞ்சன் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்கள் ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்வீடிஷ், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. கடந்த ஓராண்டாக புற்றுநோயால் கடும் அவதிப்பட்டு வந்தார் இந்த நிலையில் பகல் 12.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. 

வைரமுத்து புகழாரம்:

பிரபஞ்சனின் நாவல்களில் பெண்ணியம் சற்று தூக்கலாக இருக்கும் என்றும், சமரசம் இல்லாத ஒரு படைப்பாளி பிரபஞ்சன் என்று வைரமுத்து புகழாரம் சூட்டி உள்ளார். பிரபஞ்சனின் எழுத்துக்கள் நீண்டகாலம் தமிழர்களால் வாசிக்கப்படும் என்று வைரமுத்து தெரிவித்து உள்ளார். 

எழுத்தாளர்கள் இரங்கல்:

பிரபஞ்சன் மறைவுக்கு பிரபல எழுத்தாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். எழுத்தாளர்கள் தமிழ் மகன், ரவிக்குமார், மனுஷ்யபுத்திரன் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஒட்டு மொத்த தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடியவர் பிரபஞ்சன் என்று பாராட்டு தெரிவித்து உள்ளனர். தீவிர இலக்கியங்களை படைத்தவர் பிரபஞ்சன் என்று எழுத்தாளர் சுபா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

 

மூலக்கதை