அவலம்! சாலை உயரம் அதிகரிப்பால் தாழ்வாகும் வீடுகளின்...மழைக்காலங்களில் அவதிப்படும் பொதுமக்கள்

தினமலர்  தினமலர்
அவலம்! சாலை உயரம் அதிகரிப்பால் தாழ்வாகும் வீடுகளின்...மழைக்காலங்களில் அவதிப்படும் பொதுமக்கள்

கடலுார்:பழுதான சாலையை அகற்றாமல், அதன் மீதே புதுப்பிக்கும் பணி மேற்கொள்வதால் சாலை உயர்ந்து, வீடுகள் தரைப் பரப்பில் இருந்து தாழ்வாகி விடுகின்றன. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வசிக்க லாயக்கற்ற நிலை ஏற்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அவ்வப்போது சாலை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் சிமென்ட் சாலைகளும், இன்னும் சில பகுதிகளில் தார் சாலைகளும் புதுப்பிக்கப்படுகிறது.சாலைகள் புதுப்பிப்பது வழக்கமான செயல் என்றாலும், அவசியத்தைக் கருதி செய்யாமல் அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் பணியை எடுத்து செய்வதன் மூலம் வார்டு உறுப்பினர்களுக்கும் கனிசமான தொகை கிடைக்கிறது.ஒவ்வொரு முறையும் சாலை போடும்போதும் முன்பிருந்த சாலையை முழுவதுமாக கொத்தி அகற்றி விட்டு புதிதாக போட வேண்டும். ஆனால், தற்போது சாலை போடுபவர்கள் பழைய சாலையின் மீதே ஜல்லி, தார் என பல லோடுகள் பயன்படுத்தி சாலையை அப்படியே புதுப்பிக்கின்றனர். இதனால், ஒவ்வொரு முறையும் சாலை போடும்போது அரை அடி வரை உயர்கிறது.இதனால் சாலை உயர்ந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகள் சாலையில் இருந்து ஒரு அடி வரை தாழ்வாகி பயனற்றுப் போய் விடுகின்றன. மழை பெய்யும் போது மழைநீர் வீட்டின் முன் பள்ளத்தில் தேங்குவதுடன், வீடுகளுக்குள்ளும் பாய்கிறது. மேலும், சாலைகளில் செல்லும் விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகும் அபாயமும் உள்ளது.இதனால், பழைமையான வீடுகளில் மக்கள் தரைதளத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு சில வீடுகளில் மேல் தளம் இருப்பவர்கள் தப்பித்து விடுகின்றனர். கீழ்தளம் மட்டுமே உள்ள வீடுகள், தண்ணீர் தேங்கி, சுவர்கள் ஈரமாகி வெயில் காலங்களில் கூட உளராமல் ஓதம் காக்கின்றன.இந்த பிரச்னை நகராட்சி சாலைகளில் மட்டுமின்றி, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை போன்ற வற்றிலும் இதே நிலை உள்ளது.சீர்கேடான சாலையை புதுப்பிக்க வேண்டுமென்றால் அந்த சாலையில் போடப்பட்டுள்ள ஜல்லிகளை பெயர்த்து எடுத்துவிட்டு மிண்டும் புதிதாக சாலை போடுவதுதான் சிறந்தது. ஆனால் அவ்வாறு சாலை போடும் ஒப்பந்ததாரர்கள் செய்வதில்லை.இனிமேலாவது உள்ளாட்சிகளில் ஒதுக்கப்படும் சாலைப்பணிகள் சாலையின் உயரத்தை அதிகரிக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை