பயணம்... படு ரணம்! கந்தலான கார்ப்பரேஷன் ரோடுகள்:நொந்து போகும் வாகன ஓட்டிகள்!

தினமலர்  தினமலர்
பயணம்... படு ரணம்! கந்தலான கார்ப்பரேஷன் ரோடுகள்:நொந்து போகும் வாகன ஓட்டிகள்!

கோவை மாநகரில், ரோடு சீரமைப்புப் பணிகளின் தரம் படுமோசமாக இருப்பதால், பெரும்பாலான ரோடுகள், கரடு முரடாகி, பொது மக்களை பாடாய்ப் படுத்துகின்றன.
தமிழகத்தில், மற்ற பெரு நகரங்களை ஒப்பிடுகையில், கோவை ரோடுகளின் பராமரிப்பு, எப்போதுமே ஓரளவுக்கு நன்றாக இருக்கும். நகருக்குள் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளான திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் சத்தி ரோடு, மாநில நெடுஞ்சாலைகளான அவிநாசி ரோடு, தடாகம் ரோடு, சிறுவாணி ரோடு, மருதமலை ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளின் பராமரிப்பு, பாராட்டும்படி இல்லை என்றாலும் பரவாயில்லை.ஆனால், மாநகராட்சிக்குச் சொந்தமான பெரும்பாலான ரோடுகளின் நிலை, படு கேவலமாக உள்ளது.
இதற்கு முன் எப்போதும் இவ்வளவு மோசமாகவும், ஆபத்தானதாகவும் மாநகராட்சி ரோடுகள் இருந்ததில்லை என்கிற அளவுக்கு, இவற்றின் நிலை இருக்கிறது. இதற்கு ஆகச்சிறந்த உதாரணம், ரேஸ்கோர்ஸ்.கலெக்டர், டி.ஆர்.ஓ., ஐ.ஜி., ஆகியோரின் குடியிருப்புகள், வருமான வரி அலுவலகம் என வி.ஐ.பி., ஏரியாவாக உள்ள ரேஸ்கோர்ஸ் ரோடே, படு பயங்கரமான குழிகளுடன் இருப்பதே, இந்த நகரில் கார்ப்பரேஷன் ரோடுகளின் அவல நிலைக்கு, 'ஒரு சோறு' உதாரணமாகவுள்ளது. இதே பகுதியிலுள்ள பிஷப் அப்பாசாமி காலேஜ் ரோடு, பெரிய பெரிய பள்ளங்களுடன், எலும்பு ஆஸ்பத்திரிக்கான ஏஜென்ட் ஆக மாறியுள்ளது.
இதேபோன்று, எஸ்.ஐ. எச்.எஸ் காலனி ரோடு, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்., ரோடு, பாரதி பார்க் ரோடு, மணியகாரம் பாளையம் ரோடு, நவஇந்தியா-சித்தாபுதுார் ரோடு, ஜி.வி.ரெசிடென்சி ரோடு, ராஜா அண்ணாமலை ரோடு உட்பட மாநகராட்சிக்குச் சொந்தமான பல ரோடுகள், பல மாதங்களாக பள்ளம், மேடுகளுடன் கந்தல் கந்தலாகி, படுமோசமாகவுள்ளன. நாளுக்கு நாள், இதன் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது.
சீரமைப்பு, பராமரிப்பு என்ற பெயரில், தரம் துளியுமின்றி, ஒப்பந்தப் பணிகளைச் செய்து அரசு நிதியை அளவின்றி கொள்ளை அடிப்பது அதிகரித்துள்ளது; கடந்த வாரத்தில், சீரமைக்கப்பட்ட வடவள்ளி ராமலிங்கா காலனி ரோடு, வெறும் ஜல்லிக் கற்களுடன் இருப்பதே, இதற்கு சிறந்த உதாரணம். ஆளுங்கட்சியினரின் 'பினாமி'களே இப்பணிகளைச் செய்வதால், அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை; கண்டிப்பதுமில்லை; இதெல்லாம் எப்போது முடியுமென்பதும் தெரியவில்லை.-நமது நிருபர்-

மூலக்கதை