பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முயற்சி: தற்காலிக "ரவுண்டானா' அமைத்த போலீசார்

தினமலர்  தினமலர்
பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முயற்சி: தற்காலிக ரவுண்டானா அமைத்த போலீசார்

பல்லடம்;பல்லடத்தில், சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், நெடுஞ்சாலை துறையினர் தூங்கி வழியும் நிலையில், போக்குவரத்து போலீசார், ரவுண்டானா அமைத்து வருகின்றனர்.
பல்லடத்தில், என்.எச்.,ரோடு, மட்டுமின்றி, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் இணைகிறது. இதனால், நாளுக்கு நாள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவுமே, இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.பல்லடம் நகர நெடுஞ்சாலைகள் அனைத்துமே, கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், இதற்கு தீர்வு காண வேண்டிய நெடுஞ்சாலை துறையினர், எதையும் கண்டு கொள்ளாமல், தூங்கி வழிகின்றனர். நெடுஞ்சாலை துறை வசம் உள்ள, மாணிக்காபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு,
செட்டிபாளையம் ரோடு உள்ளிட்ட அனைத்திலும், பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. இது குறித்து, பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்டிக் கொள்ளாமல் இருந்த போதும், இவ்விஷயத்தில், போக்குவரத்து போலீசார் காட்டும் வேகம், பொதுமக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது. வாகன நெரிசலை கட்டுப்படுத்த, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, செட்டிபாளையம் ரோடு உள்ளிட்ட சந்திப்புகளில், டிவைடர் மூலமாகவே தற்காலிக ரவுண்டான அமைக்க திட்டமிட்டுள்ளனர்.இதன் மூலம், வாகன நெரிசல் ஓரளவு கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புள்ளது.முதல் கட்டமாக, திருப்பூர் ரோடு சந்திப்பில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் இந்நடவடிக்கை, வாகன ஓட்டிகளின் பாராட்டை பெற்றுள்ளது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:பல்லடம் நகரின் பல இடங்களில் டிவைடர் முறையாக இல்லாமல், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் ரவுண்டானா, மற்றும், டிவைடர்களை அமைக்கும் பட்சத்தில், விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. இதை பற்றி, நெடுஞ்சாலை துறையினர் துளியும் அக்கறை காட்டாத நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, போக்குவரத்து போலீசார் களமிறங்கியிருப்பது பாராட்டுக்குரியுது.இரு துறையினரும் இணைந்து செயல்பட்டால், பொதுமக்களுக்கும், பல்லடம் நகருக்கும் நல்லது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை