கருணை காட்டிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி! அடுத்த சாகுபடிக்கும் ஆயத்தம்

தினமலர்  தினமலர்

பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னுார் மற்றும் சூலுார் சுற்றுப்பகுதிகளில், விவசாயத்தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில், வாழை, உளுந்து, பச்சை, சோளம் உள்ளிட்ட பயிர்கள், காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, போதிய அளவு மழை இல்லாததால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். பொங்கல் பண்டிகையை மன நிறைவுடன் கொண்டாட முடியாமல் தவித்தனர்.
ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன் பரவலாக பெய்த பருவமழை, விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது; பொங்கல் பண்டிகையை மன நிறைவுடன் கொண்டாட தயாராகியுள்ளனர். ஓரளவு பருவமழை கை கொடுத்ததால், சாகுபடி செய்து குறிப்பிட்ட அளவு மகசூல் பெற்றுள்ள இவர்கள், அடுத்த பருவமழை வரை, விவசாயத்துக்கு தேவையான நீராதாரம் இருப்பு உள்ளதாக கூறுகின்றனர். இருக்கும் நீரை கொண்டு, அதற்கேற்ப பயிர்களை சாகுபடி செய்யவும் தயாராகிவிட்டனர்.
காலத்துக்கு ஏற்ப எந்தெந்த பயிர்களை சாகுபடி செய்யலாம் என, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறைகள், அவ்வப்போது விவசாயிகளுக்கு, அறிவுரை வழங்கி வருகின்றன. இதை பின்பற்றி விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடுவது முக்கியம்.
தை மாதம் துவங்கியுள்ளதால் தை பட்டத்துக்கான உளுந்து, பச்சை பயரை விவசாயிகள் பயிரிட்டால் நல்ல லாபம் அடையலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலர் விஜயகோபால் கூறுகையில், ''உளுந்து மற்றும் பச்சை பயருக்கான விதைகள் மற்றும் அது தொடர்பான உயிர் உரங்கள் பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலகத்தில் விற்பனைக்கு தயாராக உள்ளன.விவசாயிகள் தங்களுடைய அடையாள அட்டையை காட்டி மானிய விலையில், இவற்றை பெற்றுக் கொள்ளலாம். தமிழக அரசின் இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம் என்ற விவசாய கொள்கையின் அடிப்படையில் சொட்டுநீர் பாசனம் அமைத்து, உளுந்து, பச்சை பயிரை பயிரிட்டு விவசாயிகள் வளம் பெறலாம்,'' என்றார்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில், இந்தாண்டு வாழை விவசாயம் செழிப்பாக இருக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுப்பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில், வாழை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலங்களில் மழை இல்லாததால், மகசூல் குறைந்தும், உரிய விலை கிடைக்காமலம் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
ஆனால், இரு மாதங்களுக்கு முன், பெய்த பருவமழை கை கொடுத்ததால், மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. நீராதாரமும் போதுமானதாக உள்ளது. விவசாயத்துக்கு தேவையான அளவு கிணற்று நீர் இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாழை விவசாயிகள் கூறுகையில், ''போதுமான அளவு நீர் உள்ளதால், பணப்பயிரான வாழை பயிரிட்டுள்ளோம். 11 மாதத்தில் வாழைத்தார் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்தாண்டு வாழை விவசாயம் நிச்சயம் செழிப்பாக இருக்கும். ஊடுபயிராக வெங்காயம் நட்டு வருகிறோம். இது, 70 நாட்களில் அறுவடை செய்வதால் கூடுதல் வருவாய் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாக, பொங்கல் பண்டிகையை மனநிறைவுடன் கொண்டாட முடியவில்லை. இந்தாண்டு மனநிறைவுடன் கொண்டாடுவோம்,' என்றனர்.
சூலுார்
சூலுார் வட்டாரத்தில் மானாவாரி நிலங்கள், பல ஆயிரம் ெஹக்டர் உள்ளது. இதில் முக்கிய பயிராக மஞ்சள் சோளம் பயிரிடப்படுகிறது. பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், மோப்பிரிபாளையம், வாகராயம்பாளையம், சோளக்காட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மஞ்சள் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள இருகூர், ராசிபாளையம், அருகம்பாளையம், மாதப்பூர், செம்மாண்டம்பாளையம் பகுதிகளில் மஞ்சள் சோளத்துடன் பிற பயிர் வகைகள் மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்யப்படுகிறது.இந்தாண்டு, சூலுார் சுற்றுப்பகுதிகளில், நல்ல மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுல்தான்பேட்டை பகுதியில் மக்காச்சோளம் விளைச்சல் இந்தாண்டு அதிகரித்துள்ளது.
சூலுார் அடுத்த ராவத்துார் பகுதியில், மஞ்சள் சோளம் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இதுகுறித்து, ராவத்துாரை சேர்ந்த விவசாயி சுப்ரமணியம் கூறுகையில், ''கடந்தாண்டு தை மாதம் போல் இல்லாமல், இந்த தை மாதம் எங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால், மஞ்சள் சோளம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமல் திண்டாட வேண்டிய நிலை இருந்தது.''ஆனால், இந்தாண்டு நல்ல மழை பெய்ததால், சோளம் நல்ல முறையில் விளைச்சலை கொடுத்து, சோளத்தட்டும் அதிகமாக கிடைத்தள்ளது. இதனால், கால்நடைகளுக்கு தீவன பிரச்னை என்பது இருக்காது; பால் உற்பத்தியும் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த தை மாதம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அள்ளிக்கொடுத்துள்ளது,'' என்றார்.
அன்னுார்
அன்னுார் வட்டாரத்தில் சோளத்தட்டு வெட்டும் பணி துவங்கியுள்ளது. 'மூன்று ஆண்டுக்குப்பின், இந்த ஆண்டு தான் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது,' என விவசாயிகள் தெரிவித்தனர்.அன்னுார் வட்டாரத்தில், 2015, 2016 என இரு ஆண்டுகளும் மழை பொய்த்து போனது. கறவை மாடுகளுக்கு தீவனம் கிடைக்காமல், ஏராளமான விவசாயிகள், மாடுகளை வந்த விலைக்கு விற்றனர்.இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில், அன்னுார் வட்டாரத்தில் மழை பெய்தது.இதையடுத்து, பலர் மானாவாரியாக, மஞ்சள்சோளம் உள்ளிட்ட பல்வேறு சோளப்பயிர்களை பயிரிட்டனர். அவை தற்போது அறுவடை செய்யப்படுகின்றன.

மூலக்கதை