திருவண்ணாமலை அருகே அதிகாலை பயங்கரம்: அரசு பஸ் - கார் மோதல்: டிஎஸ்பி பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவண்ணாமலை அருகே அதிகாலை பயங்கரம்: அரசு பஸ்  கார் மோதல்: டிஎஸ்பி பரிதாப பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று அதிகாலை அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி பரிதாபமாக இறந்தார். டிரைவர் படுகாயமடைந்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா கொந்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (52), இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (சமூகநீதி மனித உரிமைகள் பிரிவு) டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று சென்னையில் ஏடிஜிபி தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

பின்னர் கூட்டம் முடிந்து மீண்டும் கிருஷ்ணகிரிக்கு காரில் புறப்பட்டார். காரை ஓசூரில் உள்ள ஆக்ஸ்போர்டு மெடிக்கல் கல்லூரியில் லேப்-டெக்னீஷியனாக உள்ள சுதாகர்(38) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

திருவண்ணாமலையில் இரவு தங்கி இன்று காலை ரமணாசிரமத்தில் தரிசிக்க முடிவு செய்தனர்.

அதன்படி திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். அதிகாலை 1. 30 மணியளவில் திருவண்ணாமலை அடுத்த தென்அரசம்பட்டு கிராமம் அருகே வந்தபோது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சும், இவர்களது காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இதில் கார் நசுங்கியது. சம்பவ இடத்திலேயே டிஎஸ்பி சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

காரை ஓட்டி வந்த சுதாகர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.



தகவலறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டிஎஸ்பியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இன்று காலை எஸ்பி பொன்னி, ஏஎஸ்பி ரவளிபிரியா மற்றும் போலீசார் விசாரித்தனர்.

மேலும் இறந்தவர் டிஎஸ்பி என்பதால், இதுகுறித்த தகவலை வீடியோ கால் மூலம் ஐ. ஜிக்கு தகவல் தெரிவித்தார். விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

இறந்த டிஎஸ்பிக்கு ஞானசத்யா என்ற மனைவியும், நிவேதிதா என்ற மகளும் உள்ளனர். நிவேதிதா பல் மருத்துவம் படித்து வருகிறார்.

வேகத்தடையால் விபத்து
விபத்து நடந்த நெடுஞ்சாலை பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக பேரலில் மண் நிரப்பி இருபுறமும் குறிப்பிட்ட இடைவெளியில் தற்காலிக தடுப்புபோல் போலீசார் அமைத்துள்ளனர்.

அந்த இடத்தில் டிஎஸ்பியின் காரும், அரசு பஸ்சும் வளைந்து, வளைந்து வரும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. தற்காலிக வேகத்தடையை டிஎஸ்பிக்கு எமனாக அமைந்தது.

எனவே, தொடர் விபத்துக்கள் நடக்காமல் இருக்க தேவையற்ற இடங்களில் வைத்துள்ள தற்காலிக தடுப்புகளை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்த வேகத்தடைகள் எஸ்பி உத்தரவின்பேரில் அகற்றப்பட்டது.

.

மூலக்கதை