ஓகி புயலில் மாயமான நாகை மீனவர்கள் 5 பேர் மீட்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓகி புயலில் மாயமான நாகை மீனவர்கள் 5 பேர் மீட்பு

கொள்ளிடம்: ஓகி புயலில்  மாயமான நாகை மாவட்ட மீனவர்கள்  5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம்  அருகே உள்ள கூழையார், தொடுவாய், திமுல்லைவாசல் ஆகிய கிராமத்தை  சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த மாதம் 23ம் தேதி கேரள மாநிலத்திற்கு  மீன்பிடிக்க சென்றனர்.

25ம் தேதி கொச்சின் துறைமுகத்தில் இருந்து  ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஓகி  புயலில் சிக்கி அவர்கள் மாயமானார்கள்.



அவர்கள் கரை  திரும்பாததால் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் சோகத்தில்  ஆழ்ந்தனர். இது குறித்து கடலோர காவல் படையினர் மற்றும்  கலெக்டருக்கு  மனு அளித்தனர்.
இந்நிலையில்  கூழையார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (53), கலைமணி (30),  தமிழ்பாலன்(40), ஏழுமலை(33) ஆகிய 4 பேரும் மும்பை கடற்கரையில்  படகுடன் கரை ஒதுங்கினர்.

அவர்களை கடற்படையினர் மீட்டனர். அங்கிருந்து நேற்று மாலை புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல்  தெரிவித்தனர்.

4 பேரையும் வரும் 15ம்  தேதி மும்பையிலிருந்து சொந்த கிராமமான கூழையாருக்கு அழைத்து  வரப்பட உள்ளனர்.

அதேபோல் நாகை  நம்பியார் நகர் மீனவ கிராமத்தை  சேர்ந்த 11 மீனவர்கள், மற்றும் ஆரியநாட்டுத்தெருவை  சேர்ந்த  சந்தனகுப்புராஜ் மகன் விஜயசந்துரு (29) உள்ளிட்ட 12 பேர்   கேரளாவில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள்  அனைவரும் ஓகி  புயலில் சிக்கி மாயமானார்கள். இந்நிலையில்  குஜராத்தில் கரை ஒதுங்கிய  விஜய்சந்துருவை அப்பகுதி  கடற்படையினர் மீட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இவரைப்போல் மற்ற மீனவர்களும்  எங்கேயாவது  கரை ஒதுங்கியிருக்கலாம் என்று அவர்களின் குடும்பத்தினர்   மத்தியில்  நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஓகி புயலில் மாயமான நாகை மாவட்டத்தை சேர்ந்த இன்னும் 26  மீனவர்கள் பற்றிய தகவல் தெரியவரவில்லை.

.

மூலக்கதை